இலங்கை
சிங்கமலை ஆற்றிலிருந்து நீரை பெறுவது தற்காலிகமாக நிறுத்தம்
சிங்கமலை ஆற்றிலிருந்து நீரை பெறுவது தற்காலிகமாக நிறுத்தம்
ஹட்டன் நகருக்கு சிங்கமலை ஆற்றிலிருந்து நீர் பெறுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பயனாளர்களுக்கு விநியோகிக்கப்படும் நீர் விநியோகம் இரண்டு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், ஹட்டன் நீர் விநியோகச் சபையின் பொறுப்பதிகாரி லால் விஜேநாயக்க தெரிவித்தார்.
ஹட்டன் நகருக்கு விநியோகிக்கப்படும் நீர் சிங்கமலை ஆற்றிலிருந்தே பெறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் (08) குறித்த ஆற்றில் 17 வயது மாணவன் தவறி விழுந்து உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டார்.
இதனையடுத்து, சிங்கமலை ஆற்றிலிருந்து நகருக்கு நீர் பெறுவதை ஹட்டன் நீர் விநியோகச் சபை நிறுத்தியிருந்தது.
இன்று (10) அம்பகமுவ பொது சுகாதார வைத்திய அலுவலக அதிகாரிகள், பொது சுகாதார ஆய்வாளர் சௌந்தர்ராகவன் மற்றும் நீர் விநியோகச் சபை அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் சிங்கமலை ஆற்றில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
இதனையடுத்து, ஆற்றின் நீர் மாதிரி பகுப்பாய்விற்காக எடுக்கப்பட்டதுடன், ஆய்வறிக்கை கிடைத்த பின்னர் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என லால் விஜேநாயக்க தெரிவித்தார்.
அதுவரை, ஹட்டன் நகருக்கு 08 மணி நேரம் விநியோகிக்கப்பட்ட நீர் விநியோகம் இரண்டு மணி நேரம் குறைக்கப்பட்டு, ஆறு மணி நேரமாக விநியோகிக்கப்படும் எனவும், ஆய்வறிக்கை கிடைக்கும் வரை சிங்கமலை ஆற்றிலிருந்து நீர் பெறப்படாது எனவும் அவர் கூறினார்.