பொழுதுபோக்கு
சூர்யா இல்ல… சவுத் இந்தியாவில் முதல் சிக்ஸ்பேக் நான்தான்; பாலு மகேந்திரா பட ஹீரோ பேட்டி!
சூர்யா இல்ல… சவுத் இந்தியாவில் முதல் சிக்ஸ்பேக் நான்தான்; பாலு மகேந்திரா பட ஹீரோ பேட்டி!
தமிழ் சினிமாவின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவரான மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் திரைப்படங்களில் நடித்த நடிகர்கள் பலரும், தங்கள் தனித்துவமான பங்களிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்கள். அதில் ஒருவர்தான் நடிகர் பானுசந்தர். பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்த ‘மூடுபனி’ (1980) திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான பானுசந்தர், தனது இயல்பான நடிப்பாலும், தனித்துவமான தோற்றத்தாலும் ரசிகர்களைக் கவர்ந்தார்.’மூடுபனி’ படம் உளவியல் திரில்லர் வகையைச் சேர்ந்தது. இந்தப் படத்தில் ஒரு சைக்கோ கொலைகாரனாக பானுசந்தர் நடித்திருப்பார். அவரது கதாபாத்திரம் மிகவும் சவாலானது. குறைந்த வசனங்களுடன், தனது உடல் மொழி மற்றும் கண்களின் மூலமே உணர்வுகளை வெளிப்படுத்தும் பாத்திரமாக அது அமைந்தது. பாலுமகேந்திராவின் யதார்த்தமான காட்சி அமைப்புகள், பானுசந்தரின் நடிப்புக்கு மேலும் வலு சேர்த்தன. அந்தப் படத்தில் அவரது அமைதியான, மர்மமான தோற்றம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. ‘மூடுபனி’ பானுசந்தருக்கு வலுவான அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்ததுடன், தமிழ்த் திரையுலகில் தனித்துவமான நடிகராக அவரை அறிமுகப்படுத்தியது.இன்றைய தமிழ் சினிமாவில், நடிகர்கள் தங்கள் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதும், சிக்ஸ் பேக் பெறுவதும் சாதாரணமான ஒன்றாகிவிட்டது. ஆனால், சுமார் 3 தசாப்தங்களுக்கு முன்பே, தென்னிந்தியத் திரையுலகிலேயே முதன்முதலாக சிக்ஸ் பேக்குடன் தோன்றி, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ஒரு நடிகர் இருக்கிறார். அவர்தான் பாலுமகேந்திராவின் ‘மூடுபனி’ திரைப்பட நாயகன் பானுசந்தர். சினிமா விழாவில் சிவகுமார், நடிகர் சூர்யாவைப் பற்றிப் பேசும்போது, தென்னிந்தியாவிலேயே முதன்முதலில் சிக்ஸ் பேக் வைத்திருந்தது சூர்யாதான் என்று குறிப்பிட்ட பிறகுதான், பலரும் இதுபற்றி பேசத் தொடங்கினர். அண்மையில், தமிழ் மூவி வேர்ல்ட் மீடியா என்ற யூடியூப் சேனல் நடத்திய நேர்க்காணலில் பங்கேற்று பேசிய நடிகர் பானு சந்தர், சிக்ஸ்பேக் மீதான ஆர்வம் குறித்து பேசினார்.சிக்ஸ் பேக் மீது ஆர்வம் கொண்டதற்கு ஹாலிவுட் நடிகர்களான ஸ்டலோன் (Sylvester Stallone), அர்னால்ட் சுவாஷ்னேகர் (Arnold Schwarzenegger) ஆகியோரின் படங்களே உத்வேகம். குறிப்பாக, உலகப் புகழ்பெற்ற மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைஞரான புரூஸ் லீயை (Bruce Lee) தனது குருவாகவே கருதி, அவரது உடல் கட்டுக்கோப்பைப் பின்பற்றியதாக பானுசந்தர் பகிர்ந்துள்ளார்.’தரங்கிணி’ படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகள் இந்தியாவிலேயே முதன்முதலாக மாஸ்டர்களால் வடிவமைக்கப்பட்டவை என்று பானுசந்தர் பெருமையுடன் குறிப்பிடுகிறார். வட இந்தியப் படங்களான அக்ஷய் குமார் நடித்த படங்களுக்கு முன்பே, பானுசந்தர் மற்றும் சுமன் இருவரும் சண்டைக் காட்சிகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி, முன்னோடிகளாகத் திகழ்ந்துள்ளனர்.