இலங்கை
செம்மணிப் புதைகுழி அகழ்வுகள் உண்மைகளை வெளிக்கொணர்க; ஜனாதிபதிக்கு ஈ.பி.டி.பி. கடிதம்
செம்மணிப் புதைகுழி அகழ்வுகள் உண்மைகளை வெளிக்கொணர்க; ஜனாதிபதிக்கு ஈ.பி.டி.பி. கடிதம்
செம்மணியில் முன்னெடுக்கப்படும் அகழ்வுகளில் மனித எச்சங்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வரும் நிலையில் எக்காரணம் கொண்டும் புதைகுழி அகழ்வுகள் நிறுத்தப்படாமல் உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி ஈ.பி. டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவிக்கையில்;
செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்படுகின்ற அகழ்வுப் பணிகளில் தொடர்ச்சியாக மனித எச்சங்கள் அகழப்பட்டு வருகின்றன. இவை தொடர்பாக முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் யார் என்பது வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். இவ்விடயம் தொடர்பில் எமது மக்களிடையே நிலவுகின்ற குழப்ப நிலையை மேலும் தூண்டிவிடுவதாக சில சுயலாப அரசியல் சக்திகளின் கருத்துகளும், செயற்பாடுகளும் அமைந்து வருகின்றன.
எனவே, மேற்படி விடயம் தொடர்பில் ஆய்வுகள் மற்றும் விசாரணைகளைத் தொடர்ச்சியாக முன்கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். அதற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படவேண்டும் – என்றார்.