இலங்கை
செம்மணிப் புதைகுழி வழக்கில் உயர்மட்டத்தால் அச்சுறுத்தல்; சட்டத்தரணி சுகாஷ் குற்றச்சாட்டு
செம்மணிப் புதைகுழி வழக்கில் உயர்மட்டத்தால் அச்சுறுத்தல்; சட்டத்தரணி சுகாஷ் குற்றச்சாட்டு
செம்மணி மனிதப் புதைகுழியில் முறைப்பாட்டாளருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. உயர்மட்டங்களைச் சேர்ந்தவர்களாலேயே இந்த அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்று சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
செம்மணி சித்துப்பாத்திமனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் பதின்மூன்றாம் நாளில் பங்கேற்று அகழ்வாய்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே சட்டத்தரணி சுகாஷ் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
சித்துப்பாத்தி மயானத்தில் தகனமேடை அமைக்கப்பட்ட போது சில எலும்புப்பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்தப் பணியாளர்களால் அந்த விடயம் அரச அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
இதற்கு எதிராக கிருபாகரனால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டு நாங்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியதால் தான் இந்த வழக்கு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இடையிலே இந்த வழக்கைத் திசைதிருப்புவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் ஒரு கட்டமாக முறைப்பாட்டாளருக்குப் பல்வேறு அச்சுறுத்தல்களும் இடையூறுகளும் பல்வேறுபட்ட தரப்புகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முறைப்பாடுகள் எந்த நிலையங்களுக்கு வழங்கப்பட வேண்டுமோ அந்த நிலையங்களினுடைய உயர்மட்டங்களைச் சேர்ந்தவர்களாலேயே அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதனாலேயே ஈழத்தில் அரங்கேறிய இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை ஒன்று மாத்திரமே தீர்வாக அமையும் என்று வலியுறுத்துகிறோம் -என்றார்.