சினிமா
‘ஜானகி vs ஸ்டேட் ஆப் கேரளா’ படத்துக்கு சென்சார் தடைகள்!தலைப்பும்,சில காட்சிகளும் மாற்றம்!
‘ஜானகி vs ஸ்டேட் ஆப் கேரளா’ படத்துக்கு சென்சார் தடைகள்!தலைப்பும்,சில காட்சிகளும் மாற்றம்!
நடிகை அனுபமா பரமேஸ்வரன் மற்றும் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘ஜானகி vs ஸ்டேட் ஆப் கேரளா’ திரைப்படம் சென்சார் வாரியத்துடன் முற்றிலும் வித்தியாசமான சிக்கலில் சிக்கியுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் அடிப்படையிலான கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் தலைப்பும், முக்கியக் கதாபாத்திரத்துக்கான பெயரும் கடுமையான விமர்சனங்களை சந்தித்தன.சென்சார் வாரியம், இப்படத்தில் கதாநாயகிக்குப் பெருமைப் பெற்ற புராண பெண் தேவியான சீதையின் மற்றொரு பெயரான ‘ஜானகி’ என்ற பெயர் இடம் பெற்றிருப்பதை எதிர்த்து எழுந்துள்ளது. இப்படம் ஒரு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் வாழ்க்கையை சொல்லும் நிலையில், ‘ஜானகி’ என்ற பெயரை பயன்படுத்துவது மத உணர்வுகளை புண்படுத்தக்கூடும் என அவர்கள் தெரிவித்தனர். மேலும், திரைப்படத்தில் இடம்பெறும் நீதிமன்ற காட்சிகளில், அந்த பெயரை மியூட் செய்யும் நிலைக்கும் சென்சார் வாரியம் வலியுறுத்தியது.இதனைத் தொடர்ந்து, படம் முழுவதும் 96 இடங்களில் வெட்டுக்களை (edits) மேற்கொள்ள வேண்டும் என்ற பரிந்துரையுடன் சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து, படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கின் விசாரணை சமீபத்தில் நடைபெற்றபோது, சென்சார் வாரியத்தினருக்காக ஆஜரான சட்டத்தரணி, தலைப்பை மாற்றுவது குறித்து பரிந்துரை வழங்கினார். அவரது பரிந்துரைபடி, படத்தின் தலைப்பை ‘வி. ஜானகி vs கேரளா மாநிலம்’ அல்லது ‘ஜானகி வி. vs ஸ்டேட் ஆப் கேரளா’ என மாற்ற வேண்டுமெனக் கூறப்பட்டது. இது, கதையின் தன்மை மற்றும் உணர்வுகளை பாதிக்காமல் தலைப்பை மாற்றுவதற்கான சமநிலையான முயற்சி எனக் கூறப்பட்டது.இது குறித்து கருத்து தெரிவிக்க தயாரிப்பு குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மத்திய இடைவேளைக்குப் பிறகு, தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கறிஞர் ஹாரிஸ் பீரன், தலைப்பை மாற்றுவதற்கும், தேவையான வசன மாற்றங்களைச் செய்வதற்கும் தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதன் பேரில், முதலில் பரிந்துரைக்கப்பட்ட 96 வெட்டுக்களுக்கு பதிலாக, வெறும் 2 காட்சிகளில் மட்டும் வெட்டுக்கான ஒப்புதல் கிடைத்தது.இந்த வழக்கு திரையுலகத்தில் கருத்து சுதந்திரம், மத உணர்வுகள் மற்றும் சட்டரீதியான சமநிலையைப் பற்றிய முக்கிய விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. திரைப்படம் விரைவில் மாற்றப்பட்ட தலைப்புடன் திரைக்கு வர வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.