இலங்கை
சேர்பியாவில் தொடரும் வெகுஜனப் போராட்டங்கள் (வீடியோ இணைப்பு)
சேர்பியாவில் தொடரும் வெகுஜனப் போராட்டங்கள் (வீடியோ இணைப்பு)
பால்கன் நாடான சேர்பியாவில் அரசாங்கத்துக்கு எதிரான மிகப் பெரிய பேரணி ஒன்று நடைபெற்றிருக்கிறது.
மாணவர்கள், தொழிற்சங்கவாதிகள், பொதுமக்கள் என 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டிருந்தனர். தலைநகர் பெல்கிரேடில் யூன் 28 சனி இரவு நடைபெற்ற இந்தப் போராட்டம், கடந்த மேனாள் யூகோஸ்லாவியாவில் 35 வருடங்களின் பின்னர் நடைபெற்ற மிகப் பெரிய பொதுமக்கள் ஒன்றுகூடலாக வர்ணிக்கப்படுகின்றது.
பேரணியில் கலந்து கொள்ள வருகை தந்த மக்களைத் தடுத்துவிட அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் பேரணிக்கு அதிக எண்ணிக்கையான மக்கள் வருவதை ஊக்கப்படுத்தியதாக நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
அரச சேவைகளான தொடருந்துகளும், பேருந்துகளும் தமது வழக்கமான சேவைகளை முடக்கிய நிலையில், தனியார் பேருந்துகள் போராட்டத்துக்கு மக்களை அழைத்து வந்ததாகவும், மகிழுந்துகளில் மக்கள் கூட்டாகப் பயணித்து பெல்கிரேட் வந்து சேர்ந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் நவம்பர் முதலாம் திகதி நொவி சாட் என்ற நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த விதானம் இடிந்து விழுந்ததில் இரண்டு சிறார்கள் உட்பட 15 பொதுமக்கள் இறந்து போனார்கள்.
மீள் நிர்மாணம் செய்யப்பட்ட தொடருந்து நிலையத்தில், குறித்த விதானம் அமைந்த பகுதி மாத்திரம் திருத்தம் காணாத நிலையிலேயே விபத்து சம்பவித்திருந்தது. அரசாங்கத்தின் அலட்சியம் மற்றும் மேல்மட்ட ஊழலே விபத்துக்குக் காரணம் என தெரிவித்து அன்று முதல் மாணவர்கள் தலைமையிலான வெகுஜனப் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
குறித்த விபத்தில் பாதிக்கப்பட்டிருந்த 19 வயதான மாணவர் ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் மரணமடைந்ததைத் தொடர்ந்து போராட்டங்கள் மேலும் உத்வேகம் அடைந்தன.
தலைநகர் பெல்கிரேட்டில் மாத்திரமன்றி நாடு முழுவதிலும் பரவலாகப் போராட்டங்கள் நடைபெற்று வருவதைப் பார்க்க முடிகிறது.
‘வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக் கூறல் என்பவற்றுக்கான ஆய்வு மையம்’ வெளியிட்ட அறிக்கை, ஒரு வாரத்தில் மாத்திரம் நாட்டின் 165 இடங்களில் 410 ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாகக் கூறுகிறது. மாணவர்கள் தலைமையிலான இந்தப் போராட்டங்களுக்கு நாட்டின் 80 வீதமான மக்கள் ஆதரவு தெரிவிப்பதாகவும், மூன்றில் இரண்டு வீதமான மக்கள் மாணவர்களின் கோரிக்கைகளுக்கு இசைவு தெரிவிப்பதாகவும் இந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
நாட்டின் ஜனாதிபதியான அலெக்சான்டர் வூசிக் 12 வருடங்களாக ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருகிறார். சேர்பிய முற்போக்குக் கட்சியின் சார்பில் முதலில் தலைமை அமைச்சராகவும், பின்னர் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாகவும் அவர் ஆட்சிப் பொறுப்பில் நீடித்து வருகிறார். ஐரோப்பிய ஒன்றியத்தில் தனது நாட்டை இணைப்பதில் தீவிர ஆர்வம் காட்டிவரும் அவர், மறுபுறம் ரஸ்யாவுடன் உறவை நீடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
உக்ரைன் விவகாரத்தில் ரஸ்யாவுடனான பேச்சுக்கள் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் விருப்புக் கொண்டுள்ள அவர் உக்ரைனுக்கான ஆயுதங்களை வழங்குவதிலும் தயக்கம் காட்டி வருகின்றார். அவரின் இந்தக் கொள்கை காரணமாக மேற்குலகின் சகப்புக்கு ஆளாகி உள்ள போதிலும், மேற்குலகுடனும் அவர் நட்பு பாராட்டியே வருகின்றார்.
தற்போதைய மாணவர்களின் போராட்டங்கள் நாட்டில் ஒரு ஆட்சி மாற்றத்தைக் கோரும் மேற்குலகின் வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியே என்பது அவர் நிலைப்பாடு. மேற்குலகின் தூண்டுதல் மற்றும் நிதிப் பங்களிப்பு காரணமாகவே மாணவர்கள் போராடுவதாகக் கூறிவரும் அவர், சேர்பியாவில் ஒரு நிறப் புரட்சியை ஏற்படுத்த முனைப்புகள் நடப்பதாகத் தெரிவித்து வருகின்றார். குறிப்பாக மேனாள் யூகோஸ்லாவிய நாடும், தனது அயல் நாடுமான குரோசியா நடைபெறும் ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் செயல்படுவதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
போராட்டக்காரர்கள் பயங்கரவாதிகள் எனக் கூறிவரும் வூசிக், அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தவும் மறுத்து வருகின்றார்.
இதேவேளை, மாணவர்களின் கோரிக்கைகள் ஊழல் ஒழிப்பு, பொறுப்புக் கூறல், கல்விச் சீர்திருத்தம் என்பவற்றில் இருந்து ஆட்சிமாற்றத்தைக் கோரும் நிலைக்குச் சென்று கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
நாடாளுமன்றத்துக்குப் புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ள போராட்டக்காரர்கள், யூன் 28ஆம் திகதி சனிக்கிழமை அதற்குரிய அறிவித்தல் வெளியாக வேண்டும் என்ற கால எல்லையை முன்வைத்து இருந்தனர். அந்தக் கால எல்லை கடந்துவிட்ட நிலையிலேயே அன்றிரவு மிகப் பாரிய பேரணி நடைபெற்றிருந்தது. முகமூடி அணிந்திருந்த பெரும்பாலான ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினருடன் மோதல்களில் ஈடுபட்டிருந்தனர்.
பதிலுக்கு காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை இலக்கு வைத்து மிளகு விசிறும் ஆயுதங்களையும், தடை செய்யப்பட்ட பயங்கர ஒலி எழுப்பும் ஆயுதங்களையும் பாவித்ததாக போராட்டக்காரர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர். எனினும் ஒலி எழுப்பும் ஆயுதங்கள் பாவிக்கப்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களின் கோரிக்கைகளைக் கவனத்தில் கொள்ளப் போவதில்லை என அரசாங்கத் தரப்பில் தொடர்ச்சியாகத் தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் காவல்துறையின் உதவியுடன் போராட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து வருகின்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அது மாத்திரமன்றி, தற்போதைய அரசாங்கத்துக்கு ஆதரவான தீவிர வலதுசாரிக் குழுக்களும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக அறிக்கை விடுத்துள்ளன.
வாகனங்களுக்கான மின்கலங்களைத் தயாரிப்பதற்குத் தேவையான மூலப்பொருளான லித்தியம் என்ற கனிமவளம் சேர்பியாவில் அதிக அளவில் உள்ள நிலையில், தற்போதைய அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டிய தேவை மேற்குலகுக்கு உள்ளது. சேர்பியாவில் அதிகரித்துவரும் ரஸ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் செல்வாக்கு மேற்குலகுக்கு உறுத்தலாக உள்ள போதிலும் வூசிக் தலைமையிலான ஆட்சியை அனுசரித்துப் போக வேண்டிய நிலையிலேயே மேற்குலகம் உள்ளதாகத் தெரிகின்றது. இதன் காரணமாக மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களுக்கு மேற்குலகின் வெளிப்படையான ஆதரவை அவர்கள் எதிர்பார்க்க முடியாது.
தற்போதைய சேர்பிய அரசின் ஆட்சிக் காலம் 2027ஆம் ஆண்டிலேயே முடிவடைய உள்ளது. ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் அந்த ஆண்டிலேயே நடைபெற உள்ளன. அது மாத்திரமன்றி சேர்பிய முற்போக்குக் கட்சி தலைமையிலான கூட்டணி 250 நாடாளுமன்ற ஆசனங்களில் 156 இடங்களைக் கொண்டுள்ளது. வலுவான நிலையில் உள்ள ஆட்சியை மாணவர்களின் போராட்டங்களின் மூலம் கிட்டிய எதிர்காலத்தில் கவிழ்த்து விடலாம் என்பது பகல் கனவே.
ஆனால், 25 வருடங்களுக்கு முன்னர் சேர்பியாவில் இதுபோன்ற ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு நடைபெற்றிருந்தது. 2000, செப்டெம்பர் 24ஆல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஸ்லோபடோன் மிலோசவிச் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆரம்பமான வெகுஜனப் போராட்டங்கள் 2 வார காலப் பகுதியிலேயே அவர் பதவி விலகும் நிலைமைக்கு இட்டுச் சென்றிருந்தது.
மீண்டும் அத்தகைய ஒரு நிலை வூசிக் அவர்களுக்கும் ஏற்படுமா என்பதே தற்போது உள்ள பெறுமதியான கேள்வி. எதிர்க் கட்சிகள் பிளவுண்டு கிடக்கும் நிலையிலும், நாட்டின் ஆயுதப் படையினர் வூசிக் அவர்களின் பின்னால் திடமாக அணிதிரண்டு நிற்கும் நிலையிலும் அவரது பதவிக்கு கிட்டிய எதிர்காலத்தில் ஆபத்து எதுவும் இருக்காது என்றே தெரிகிறது. ஆனால், அரசியலில் எதுவும் நடக்கக்கூடும் என்பதே யதார்த்தம்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை