பொழுதுபோக்கு
பொய் சொல்லுவியா? கம்பத்தில் கட்டி வைத்து எறும்பை கடிக்க விட்ட அம்மா: லாரன்ஸ் ப்ளாஷ்பேக்!
பொய் சொல்லுவியா? கம்பத்தில் கட்டி வைத்து எறும்பை கடிக்க விட்ட அம்மா: லாரன்ஸ் ப்ளாஷ்பேக்!
சினிமா உலகில் பன்முக திறமை கொண்டவர்கள் மிகவும் குறைவு. அவர்களில் ராகவா லாரன்ஸ் முதன்மையானவர். டான்ஸ் மாஸ்டராக தனது பயணத்தை தொடங்கிய ராகவா லாரன்ஸ், அதன் பின்னர் நடிகர், இயக்குநர் என்று தனது திறமைகளை வெளிப்படுத்தினார்.தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் இவர் இயக்கி நடித்த திரைப்படங்கள் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளன. சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் நடித்த ஜிகர்தண்டா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பெரும் வெற்றி பெற்றது. இதில், ராகவா லாரன்ஸின் மாறுபட்ட நடிப்பு, அவருக்கு பாராட்டுகளை பெற்றுத் தந்தது.ஆனால், இது மட்டுமின்றி சமூகத்தின் பலதரப்பட்ட மனிதர்களுக்கும் அறக்கட்டளை மூலம் ராகவா லாரன்ஸ் செய்து வரும் உதவி, மக்கள் இடையே அவருக்கு நன்மதிப்பை பெற்றுத் தருகிறது. எந்த விதமான பலனையும் எதிர்பார்க்காமல் அவர் செய்யும் உதவிகள், பலரையும் இதே பாதையில் பயணிக்க உந்துசக்தியாக அமைந்துள்ளது.இதேபோல், தன்னுடைய தாயார் மீது தான் கொண்ட பாசம், மரியாதை குறித்து பல்வேறு சூழல்களில் ராகவா லாரன்ஸ் பதிவு செய்துள்ளார். அதன்படி, சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ராகவா லாரன்ஸும், அவரது தாயாரும் கலந்து கொண்டனர். அப்போது, சிறு வயதில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை ராகவா லாரன்ஸ் நினைவு கூர்ந்தார்.அந்த வகையில், “இந்த உலகத்திலேயே என்னுடைய அம்மாவை தான் எனக்கு மிகவும் பிடிக்கும். சிறு வயதில் ஒரு முறை பள்ளிக்கு செல்லவில்லை. இதனால், என்னுடைய அம்மா என்னை கம்பத்தில் கட்டிவிட்டு எறும்பை கடிக்க விட்டார்கள். பள்ளிக்கு சென்றதாக பொய் கூறியதால் இந்த தண்டனை கொடுத்தார்கள். இந்த ஒரு விஷயம் மட்டும் தான் எனக்கு பிடிக்காது” என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.