உலகம்
ஈரானிய அரச தலைவருக்கு என்ன நடந்தது
ஈரானிய அரச தலைவருக்கு என்ன நடந்தது
பன்னாட்டு ஊடகங்கள் முரணான தகவல்
ஈரானிய அரச தலைவர் இப்ராஹிம் ரைசி உள்ளிட்டவர்கள் பயணித்த உலங்கு வானூர்தியைக் காணவில்லை என்று பன்னாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சீரற்ற காலநிலை காரணமாக ஈரானிய அரச தலைவர் பயணித்த உலங்கு வானூர்தி அவசரமாக தரையிறக்கப்பட்டதாக மற்றொரு செய்தி தெரிவித்தது. ஆனாலும் இதுவரையில் ஈரானிய அரசிடமிருந்து உத்தியோகபூர்வ தகவல் எவையும் வெளிவரவில்லை.
ஈரான் அரசதலைவர் இப்ராஹிம் ரைசி, ஈரான் அயலுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலேக் ரஹ்மதி, கிழக்கு அஜர்பைஜானுக்கான ஈரானிய அரச தலைவரின் பிரதிநிதி அயதுல்லா முகமது அலி அலே-ஹஷேம் ஆகியோர், அசர்பைஜான் அரச தலைவர் இல்ஹாம் இன்று சந்தித்துவிட்டு ஈரானுக்கு திரும்பும் வழியிலேயே அவரது உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதாக பன்னாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூன்று உலங்குவானூர்திகள் பயணித்ததாகவும், அதில் இரண்டு உலங்குவானூர்திகள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாகவும், எனினும் அரச தலைவர் உள்ளிட்டவர்கள் பயணித்த உலங்குவானூர்தி விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸர்பைஜான் எல்லைக்கு சென்று திரும்பும் வழியில் சுங்குன் என்ற செப்புச் சுரங்கத்துக்கு அருகில் – கடும் பனிமூட்டம் நிறைந்த மலைப்பகுதியை கடக்கும்போது விபத்துக்குள்ளானதாக பன்னாட்டு ஊடகங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஈரானின் அரச தொலைக்காட்சி தனது வழமையான நிகழ்ச்சிகளை தற்போது நிறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் அரச தலைவர் இப்ராஹிம் ரைசிக்காக வழிபாடுகள் இடம்பெற்றுவருவதையும், ஈரானிய அரச தலைவரின் உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதான கூறப்படும் இடத்தில் தேடுதல் நடத்தும் மீட்புக் குழுவினரின் நடவடிக்கைகளையும் நேரடியாக ஒளிபரப்பி வருகின்றது.
ஈரானிய அரச தலைவரை இன்று சந்தித்த அசர்பைஜான் அரச தலைவர் இல்ஹாம் எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
‘இன்று ஈரான் இஸ்லாமிய குடியரசின் அரச தலைவர் இப்ராஹிம் ரைசியுடன் நட்பு ரீதியிலான சந்திப்பின் பின்னர் ஈரான் உயர்மட்டக் குழுவை ஏற்றிச் சென்ற உலங்குவானூர்தி அவசரமாக தரையிறக்கப்பட்ட செய்தி பெரும் கவலையை ஏற்படுத்தியது. எல்லாம் வல்ல இறைவனிடம் எங்களின் வழிபாடுகள். ஆரச தலைவர் இப்ராஹிம் ரைசி மற்றும் அவருடன் தூதுக்குழுவினருக்காக எங்கள் வேண்டுதல்கள். அண்டை நாடு, நண்பர் மற்றும் சகோதர நாடு என்ற வகையில், அசர்பைஜான் குடியரசு அனைத்து வகையான ஆதரவையும் வழங்க தயாராக உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (அ)