தொழில்நுட்பம்
சூரியக் குடும்ப வரலாற்றை மாற்றி அமைக்கும் சிறு விண்கல்: கோள்கள் உருவானது குறித்த புதிய தகவல்!
சூரியக் குடும்ப வரலாற்றை மாற்றி அமைக்கும் சிறு விண்கல்: கோள்கள் உருவானது குறித்த புதிய தகவல்!
ஒரு குட்டி விண்கல், நமது சூரியக் குடும்பத்தின் வரலாற்றை மீண்டும் எழுதத் தொடங்கியுள்ளது. நார்த்வெஸ்ட் ஆப்பிரிக்கா 12264 (Northwest Africa 12264) என்று பெயரிடப்பட்ட வெறும் 50 கிராம் எடையுள்ள இந்த விண்கல், பாறை உலகங்கள் (rocky worlds) எப்போது, எப்படி உருவானது? என்பது பற்றிய புதிய புரிதலைக் கொண்டு வந்துள்ளது.பூமி, செவ்வாய் போன்ற உட்புறக் கோள்கள், அவற்றின் வெப்பநிலைக் காரணமாக, தொலைதூரக் கோள்களை விட முன்னரே உருவாகியிருக்க வேண்டும் என்று முன்பு கருதப்பட்டது. ஆனால், சிறுகோள் நீள்வட்டத்திற்கு அப்பாலிருந்து வந்த இந்த விண்கல் பற்றிய புதிய ஆய்வு, சூரியக் குடும்பம் முழுவதும் கோள்களின் பிறப்பு முன்பு நம்பப்பட்டதை விட பல கோடி ஆண்டுகளுக்கு முன்னரே நிகழ்ந்ததாகக் கூறுகிறது. இது சூரியக் குடும்பத்தின் உட்புற மற்றும் வெளிப்புறப்பகுதிகளில் கோள்கள் உருவான கால இடைவெளியைக் குறைக்கிறது. தி ஓபன் யுனிவர்சிட்டியின் (The Open University) டாக்டர் பென் ரைடர்-ஸ்டோக்ஸ் (Dr. Ben Rider-Stokes) தலைமையிலான இந்த ஆய்வு கம்யூனிகேஷன்ஸ் எர்த் & என்விரான்மென்ட் (Communications Earth & Environment) இதழில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த விண்கல்லின் ரசாயனக் கலவை முக்கிய ஆதாரங்களை வழங்குகிறது. இதன் குரோமியம் (chromium) மற்றும் ஆக்ஸிஜன் ஐசோடோப்பு விகிதங்கள், இது வெளிப்புற சூரியக் குடும்பத்தில் உருவானது என்பதை உறுதிப்படுத்துகின்றன. மிக முக்கியமாக, ஈய ஐசோடோப்பு (lead isotope) டேட்டிங் மூலம் இதன் வயது 4.564 பில்லியன் ஆண்டுகள் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வயது, ஆரம்பகால கோள் மேலோடுகளை குறிக்கும் உட்புற சூரியக் குடும்பத்தின் பசால்ட் (basalt) மாதிரிகளின் வயதுக்கு கிட்டத்தட்ட ஒத்ததாக உள்ளது.இந்தக் கண்டுபிடிப்புகள், வியாழனுக்கு அப்பால் உள்ள பாறை கோள்கள், அவற்றின் அதிக நீர்ச்சத்துக் காரணமாக 2 முதல் 3 மில்லியன் ஆண்டுகள் தாமதமாக உருவானவை என்ற முந்தைய நம்பிக்கைக்கு நேரடியாகச் சவால் விடுகின்றன. பனியும் நீரும், கோள்களின் உள் அடுக்குகள் உருவாகும் செயல்முறையை (differentiation) மெதுவாக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், வெளிப்புற சூரியக் குடும்பத்தில் உருவாகி, உட்புற சூரியக் குடும்பத்தின் வயதுடைய இந்த விண்கல், பாறை கோள்கள் உருவானது மிக ஒத்திசைவான செயல்முறை என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.இந்தக் கண்டுபிடிப்பு, எக்ஸோபிளானட் (exoplanet) அமைப்புகளின் ஆய்வுகளுடனும் ஒத்துப்போகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். பிற நட்சத்திரங்களைச் சுற்றியுள்ள தூசி மற்றும் வாயு வட்டு பற்றிய அவதானிப்புகளின் அடிப்படையில், சிறிய கோள்கள் (planetesimals) விரைவாகவும், பெரிய சுற்றுப்பாதை பிரிவுகளிலும் உருவாகின்றன என்பதற்கான ஆதாரம், ஆரம்பகால சூரியக் குடும்பத்தின் பரிணாம வளர்ச்சி முன்பு நினைத்ததை விட அதிக உலகளாவியதாக இருந்திருக்கலாம் என்ற வாதத்திற்கு வலு சேர்க்கிறது.இந்தக் கால வேறுபாடு பிரபஞ்சத்தின் அளவில் மிகச் சிறியதாகத் தோன்றினாலும், இதன் தாக்கம் மிக அதிகம். கோள் உருவாக்கத்தின் ஒரு புதிய காலவரிசை, பூமியின் வரலாற்றை மீண்டும் கூறுவதுடன், பால்வழியில் (galaxy) கோள்கள் எப்படி உருவாகின்றன என்பது பற்றி வானியலாளர்கள் எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்பதையும் மாற்றியமைக்கலாம். இது, பால்வழியில் பூமியைப் போன்ற கோள்கள் எங்கு, எப்படி உருவாக முடியும் என்பது பற்றிய புதிய தடயங்களையும் வழங்குகிறது.