பொழுதுபோக்கு
எம்.ஜி.ஆர் உடன் நடித்த இந்தப் படம் தான் திருப்புமுனை; சரோஜாதேவியை முற்றுகையிட்ட 30 பட வாய்ப்புகள்
எம்.ஜி.ஆர் உடன் நடித்த இந்தப் படம் தான் திருப்புமுனை; சரோஜாதேவியை முற்றுகையிட்ட 30 பட வாய்ப்புகள்
இந்திய சினிமா கண்ட பழம் பெரும் நடிகைகளில் ஒருவர் நடிகை சரோஜா தேவி. இந்நிலையில், அவர் வயது முதிர்வு காரணமாக பெங்களூருவில் இன்று காலமானார். அவருக்கு வயது 87.நடிகை சரோஜா தேவி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர். உடன் 26 படங்களிலும், சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும் நடித்துள்ளார். 50 ஆண்டுகால திரை வாழ்வில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய்யுடன் ஒன்ஸ்மோர், சூர்யாவுடன் ஆதவன் படங்களில் சரோஜா தேவி நடித்திருந்தார்.இந்நிலையில், சரோஜா தேவி எம்.ஜி.ஆர். உடன் தங்கமலை ரகசியம், திருமணம், மனமுள்ள மருதாரம் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் படம் தான் இவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது. எம்.ஜி.ஆர் படத்தில் இவர் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டவுடன் அடுத்தடுத்து அவருக்கு 30 பட வாய்ப்புகள் குவிந்தது தனி வரலாறு. கர்நாடகாவில் பிறந்த சரோஜா தேவி, 1955-ம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸ் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். நடிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை என்றாலும் தனது அம்மாவுக்காக ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்ட சரோஜா தேவி, மகாகவி காளிதாஸ் படத்தில் நடித்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால், அடுத்து ஒரு படத்தில் மட்டும் நடித்துவிடு என்று அவரது அம்மா கூறியுள்ளார்.அவரின் வார்த்தையை ஏற்றுக்கொண்டு அடுத்து ஒரு படத்தில் நடித்த சரோஜா தேவி, மீண்டும் பெங்களூர் சென்று தனது பள்ளி படிப்பை தொடர முடிவு செய்துள்ளார். அந்த நேரத்தில், தமிழ் இயக்குனரான கே.சுப்பிரமண்யம், தான் கன்னடத்தில் இயக்க உள்ள கட்ச தேவயானி என்ற படத்தில் சரோஜா தேவி நடிக்க வேண்டும் என்று விருப்பப்பட, அம்மாவின் வற்புறுத்தலால் மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய சரோஜா தேவி அந்த படத்தில் நடித்திருந்தார்.இந்த படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அடுத்தடுத்து சரோஜா தேவிக்கு பட வாய்ப்பும் குவிய தொடங்கியது. அதன்பிறகு தான், தமிழில் திருமணம் படத்தின் மூலம் அறிமுகமான இவர், அடுத்து சிவாஜியின் தங்கமலை ரசகியம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான செங்கோட்டை சிங்கம் படம் தான் சரோஜா தேவி நாயகியாக நடித்த முதல் படம்.அதனைத் தொடர்ந்து ஸ்ரீதர் இயக்கிய கல்யாணப்பரிசு படத்தில் நடித்த சரோஜா தேவி, 1961-ம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆரின் திருடாதே படத்தில் இவருடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்திற்காக சரோஜா தேவிக்கு வழங்கப்பட்ட சம்பளம் ரூ5000. அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான நாடோடி மன்னன் படத்திலும் சரோஜா தேவியே நாயகியாக நடித்த நிலையில், அதன்பிறகு அடுத்தடுத்து 30 படத்திற்கு தனக்கு வாய்ப்பு வந்ததாக நடிகை சரோஜா தேவி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் என்று இயக்குனரும் பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“