இலங்கை
தமிழருக்கு இழைத்த அநீதிகளுக்கு ஒரே சந்தர்ப்பத்தில் விசாரணை; வலியுறுத்துகின்றார் கஜேந்திரகுமார் எம்.பி.
தமிழருக்கு இழைத்த அநீதிகளுக்கு ஒரே சந்தர்ப்பத்தில் விசாரணை; வலியுறுத்துகின்றார் கஜேந்திரகுமார் எம்.பி.
1948ஆம் ஆண்டில் இருந்து தமிழ்த்தேசத்துக்கு நடத்தப்பட்ட முழு அநியாயமும். இனப்படுகொலை செயற்பாடுகளும் ஒரே சந்தாப்பத்தில் விசாரிக்கப்பட்டால் மட்டுமே உண்மையான யதார்த்தத்தை விளங்கிக்கொள்ளலாம் என்று அகில இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளின் பேரவையின் ஆணையாளர் கடந்த வாரம் இலங்கைக்கு வந்த போது தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக தலைவர்கள் செயற்பாட்டாளர்களின் ஒப்புதலோடு ஒரு கடிதத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரிடம் வழங்கினோம். அந்தக் கடிதத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானமும் கையொப்பமிட்டிருந்தார்.
ஆயினும் அடுத்த வாரமே இலங்கை தமிழரசுக் கட்சி தலைவரும், பொதுச் செயலாளரும் செம்மணி விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்திடம் அந்த விசாரணை நடத்துவதற்குரிய அங்கீகாரத்தைக் குறிப்பிட்டு, அதற்கு மேலதிகமாக ஒரு சில சர்வதேச தரப்புகளின் கண்காணிப்போடு செய்வதற்குரிய ஆலோசனைகளையும் வழங் கியுள்ளனர். இது நேருக்கு நேர் முரண்பட்ட நிலைப்பாடு. செம்மணியில் நடந்தது அநியாயம். இலங்கை அரசு அதை மூடி மறைக்க முயற்சித்த நிலையில் எதேச்சையாகத் தற்போது வெளிவந்துள்ள ஆதாரங்களை மூடிமறைக்கின்ற சந்தர்ப்பங்களை வழங்குகிறீர்கள் என்பதாகவே இந்தக் கடிதத்தைப் பார்க்க வேண்டியுள்ளது.
இப்படிப்பட்ட தவறுகள் நடக்கக்கூடாது என்பதற்காக எதிர்வரும் வார இறுதியில் தமிழ்த்தேசியக்கட்சித் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் மனித உரிமை அமைப்புகளையும் ஓரிடத்தில் சந்தித்து 2021 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி எழுதிய கடிதத்தை எந்த விதமான பின் வாங்கலும் இல்லாமல் மிக இறுக்கமாக அனைவராலும் கடைப்பிடிப்பதற்குரிய அணுகுமுறையை உறுதிப்படுத்தவுள்ளோம். இந்தக் கூட்டத்துக்கான உத்தியோகபூர்வ அழைப்பு அனைத்துத் தரப்பினருக்கும் அனுப்பப்படும்.