இலங்கை
மீண்டும் உயிர்பெற்ற பாலியாற்றுத் திட்டம்; அமைச்சர்கள் நேற்று நேரடி ஆய்வு
மீண்டும் உயிர்பெற்ற பாலியாற்றுத் திட்டம்; அமைச்சர்கள் நேற்று நேரடி ஆய்வு
வனவளத் திணைக்களமும் ஒப்புதல்
பாலியாற்றுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக துறைசார் அமைச்சர்கள் நேற்றுக் களப்பயணம் மேற்கொண்டு நிலைகளை நேரில் ஆராய்ந்ததுடன், மன்னாரில் இது தொடர்பாக கலந்துரையாடலையும் நடத்தினர். அந்தக் கலந்துரையாடலில் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சாதகமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
பாலியாற்றுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வனப்பகுதியை வழங்குவதற்கு வனவளத் திணைக்களம் மறுப்புத் தெரிவித்திருந்த நிலையில், துறைசார் அமைச்சர்களான தம்மிக்க பட்ட பென்டி, அநுர கருணாதிலக ஆகியோர் நேற்று வடக்குக்கு வந்து நேரில் களப்பயணம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தனர். கள ஆய்வுக்குப் பின்னர் மன்னாரில் அமைச்சர்கள் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. அதில் சம்பந்தப்பட்ட திணைக்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
வனப்பகுதியை வழங்குவதற்கு இதுவரை மறுப்புத் தெரிவித்து வந்த வன வளத் திணைக்களம் நேற்றைய கலந்துரையாடலில் சாதகமான பதிலை வழங்கியுள்ளது. அதையடுத்து சுற்றுச்சூழல் சாதக, பாதக அறிக்கையின் பின்னர் இந்தத் திட்டம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்று கலந்துரையாடலில் அமைச்சர்கள் தீர்மானித்தனர். வடக்கு மாகாணத்தில் உள்ள மிகவும் முக்கியமான ஆறாகப் பாலியாறு காணப்படுகின்றது. 68.4 கிலோமீற்றர் நீளமுள்ள இந்த ஆறு வவுனியா மாவட்டத்தின் புளியங்குளத்தில் ஆரம்பித்து, வடக்கு மற்றும் வடமேற்குத் திசை நோக்கி நகர்ந்து முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களைக் கடந்து கடலுக்குள் கலக்கின்றது. பாலியாற்றை இடைமறித்து மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 4.6 கிலோ மீற்றர் நீளமும், 41 அடி உயரமும் கொண்ட மண் அணைக்கட்டு அமைக்கப்பட்டு உருவாக்கப்படவுள்ள நீர்த்தேக்கமே பாலியாறு குடிதண் ணீர்த் திட்டமாகும். இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டமும், கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசசெயலாளர் பிரிவும், மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு மற்றும் மடு பிரதேச செயலாளர் பிரிவுகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுகளும் குடி தண்ணீரைப் பெறக்கூடியதாக இருக்கும்.
இந்தத் திட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்வாங்க அடிப்படையில் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியாற்றுத் திட்டத்துக்குத் தேவையான வனப்பகுதியை வழங்க முடியாது என்று வனவளத் திணைக்களம் முரண்டு பிடித்து வந்தது. இதனால், இந்தத் திட்டமே முடங்கும் ஆபத்து ஏற்பட்டிருந்த நிலையிலேயே, துறைசார் அமைச்சர்கள் குழு வடக்குக்கு வந்திருந்தது.