சினிமா
காமராசர் பிறந்தநாளுக்கு நெகிழ்ச்சியான பதிவினை வெளியிட்ட வைரமுத்து.!
காமராசர் பிறந்தநாளுக்கு நெகிழ்ச்சியான பதிவினை வெளியிட்ட வைரமுத்து.!
தமிழகத்தில் மக்கள் மனங்களில் எப்போதும் ஒளிரும் தலைவனாக திகழ்ந்தவர் காமராசர். சாதாரண மனிதராக ஆரம்பித்து, தமிழகத்தின் புகழ்பெற்ற நபராக உயர்ந்த அவரின் வாழ்க்கை, ஒவ்வொரு புதிய தலைமுறைக்கும் வழிகாட்டியாக உள்ளது.இன்றைய தினம், [ஜூலை 15] காமராசரின் பிறந்த நாள். அவரை நினைவு கூர்ந்து தமிழகமெங்கும் அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், பொது மக்கள் மற்றும் சமூக ஊடகங்களின் வழியாக பல்வேறு நினைவுப் பதிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இத்தனை பதிவுகளுக்கிடையில் கவிஞர் வைரமுத்து எழுதிய பதிவு தான் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றது.இன்றைய நாள் குறித்து கவிஞர் வைரமுத்து தனது சமூக ஊடகப் பக்கத்தில், “படிக்காத காமராசர் பள்ளிகள் செய்தார். வீடு கட்டாத காமராசர் அணை கட்டினார். புத்தகம் எழுதாத காமராசர் நூலகம் திறந்தார். காசு வைத்துக்கொள்ளாத காமராசர் ஏழைத் தமிழர்களை ஈட்டச் செய்தார்.மற்றவர்க்கு நாற்காலி தந்து தன் பதவி தான் துறந்தார். ‘கருப்பு காந்தி’ என்று அழைக்கப்பட்டாலும், காந்தி காணாத துறவறம் பூண்டார். காமராசர் நினைக்கப்பட்டால் அறத்தின் சுவாசம் அறுந்துவிடவில்லை என்பதே பொருள். காமராசர் மறக்கப்பட்டால் மழையே தண்ணீரை மறந்துவிட்டது என்பதே பொருள். நான் உங்களை நினைக்கிறேன் ஐயா!” என்ற பதிவினை வெளியிட்டுள்ளார்.இந்த வரிகளைப் படிக்கும்போதே, ஒருவர் கண்களில் கண்ணீர் வருவதை தடுக்க முடியாது. ஒவ்வொரு வரியிலும் காமராசரின் பணிவும், நெஞ்சார்ந்த அரசியல் சேவையும், தன்னலமற்ற வாழ்க்கை முறையும் பிரதிபலிக்கின்றது.