இலங்கை
கொழும்பில் மரண வீதி ; தமிழுக்கு வந்த சோதனை!
கொழும்பில் மரண வீதி ; தமிழுக்கு வந்த சோதனை!
கொழும்பில் பல வீதிகள், அரச நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் தவறாகவே காணபடுவதும், சுட்டிக்காட்டப்பட்ட பின்னர் அதனை திருத்துவதும் வழமை.
அந்தவகையில் கொழும்பு கோட்டையில், “Chatham” என்ற ஆங்கிலப் பெயரை தமிழில் ”செத்தம் வீதி” என பெயர் பலகை நீண்டகாலமாக காணப்படுவதாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு கோட்டையில், நீண்டகாலமாக ”செத்தம் வீதி” என்ற பெயர் பலகையை அவதானித்து வந்தேன்.
பொருத்தமான தமிழில் திருத்தி எழுதுவார்கள் என்று நம்பியிருந்தேன். ஆனால் அதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.
கருத்துப் பிழை – சொற் பிழை – எழுத்துப் பிழை ஆகியவற்றுடன் பல வீதிகள், அரச நிறுவனங்களின் பெயர் பலகைகள் கொழும்பில் காணப்படுவது வழமை தான். இது ஒன்றும் புதிதல்ல.
ஆனால், இந்தப் பெயர் பலகையில் உள்ள ”செத்தம்” என்ற சொற் பிழை மிக ஆபத்தானது.
ஏனெனில் பேச்சுத் தமிழில் ”செத்தம்” என்றால் மரணத்தை குறிக்கும்.
ஆகவே விளக்கம் தெரியாத ஒருவர் “Chatham” என்ற ஆங்கிலப் பெயரை தமிழில் தவறான அர்த்தத்துடன் எழுதியிருக்கிறார்.
இந்தப் பெயர் பலகையில் விளம்பரம் செய்துள்ள இலங்கை வங்கியில் (Bank of Ceylon) பணியாற்றும் தமிழ் அதிகாரிகள் அல்லது பொறுப்புள்ள வேறு தமிழ் அதிகாரிகள் இப்பிழையை இதுவரை கவனிக்கவில்லையா?
ஸ்ரீலங்கா ரெலிகொம் பிரதான தலைமை அலுவலகத்துக்கு அருகாகவும், இலங்கை வங்கி தலைமை அலுவலகம் முன்பாகவும் இந்த வீதி அமைந்துள்ளது.
ஜனாதிபதி மாளிகை, பிரதான அரச நிறுவனங்கள் அமைந்துள்ள பரபரப்பான பகுதி இது.
ஆகவே தயவுசெய்து பொறுப்பானவர்கள், இதனை கவனத்தில் எடுங்கள்.
சதாம் வீதி என்றுதான் இப் பெயர் பலகை முன்னர் தமிழில் எழுதப்பட்டிருந்தது.
பெயர் பலகையை புதுப்பிக்க வேண்டும் என்பதற்காக, தமிழ் மொழி அர்த்தங்களை கொலை செய்ய முடியுமா?
கொழும்பு மாநகர சபை இதற்குப் பொறுப்புச் சொல்ல வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.