இலங்கை

யாழில் தொடரும் கந்து வட்டி கும்பலின் அராஜகம்!

Published

on

யாழில் தொடரும் கந்து வட்டி கும்பலின் அராஜகம்!

யாழ்ப்பாணத்தில் கந்து வட்டி கும்பலைச் சேர்ந்த நால்வர் மல்லாகம் நீதிவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  

குடும்பஸ்தர் ஒருவருக்கு கந்து வட்டிக்கு கடன் கொடுத்த நபர், கடனை கொடுக்கத் தவறியமையால் மூன்று பேருடன் இணைந்து, பணம் பெற்றவரை இளவாலை பகுதிக்கு கடத்திச் சென்று, நிர்வாணமாக்கி, அவரை மோசமாக தாக்கி, சித்திரவதைகள் செய்துள்ளனர். 

Advertisement

அத்தோடு, அந்த சித்திரவதைக் காட்சிகளை தமது ஸ்மார்ட்போனில் காணொளியாகவும் அந்தக் கும்பல் பதிவு செய்துள்ளது. 

பின்னர், பணம் பெற்ற நபரை மிரட்டி, விடுவித்துள்ளனர். 

அதனையடுத்து, பாதிக்கப்பட்ட நபர் தனக்கு நேர்ந்த கொடுமைகள் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்தார். 

Advertisement

அந்த முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குடும்பஸ்தரை கடத்திச் சென்றமை, தாக்கியமை , சித்திரவதை செய்தமை முதலான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வட்டிக்கு பணம் கொடுத்த நபர் உட்பட நான்கு பேரை கைது செய்து விசாரணைகளை நடத்தினர்.  

விசாரணைகளின் பின்னர், கைதான நால்வரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதேவேளை, சித்திரவதை மற்றும் தாக்குதலை காணொளியாக பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை பகுப்பாய்வு செய்யவும்  பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

Advertisement

கடந்த வருடமும், இதேபோன்று யாழ்ப்பாணம் மருதனார் மட பகுதியில் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர் ஒருவர் , தன்னிடம் பணம் பெற்று, அவற்றினை திருப்பிச் செலுத்த தவறியவர்களை கடத்திச் சென்று தோட்டவெளி ஒன்றில் நிர்வாணமாக்கி தாக்கி, சித்திரவதை செய்து, அவற்றை  கைப்பேசியில் காணொளியாக பதிவேற்றிய சம்பவங்கள் இடம்பெற்றன. 

அவற்றில் சில காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து, இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார், கந்து வட்டி கும்பலை கைதுசெய்து நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர். 

அதனையடுத்து, தற்போதும் அதே பாணியில் குற்றம் இழைத்த கும்பலொன்றை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version