பொழுதுபோக்கு
வெண்ணிலா கபடி குழு ரிலீஸ் டைம்; கலெக்டருக்கே ஐஸ்கிரீம் கொடுத்தவர் எங்க அப்பா; நடிகர் சூரி ஃப்ளாஷ்பேக்!
வெண்ணிலா கபடி குழு ரிலீஸ் டைம்; கலெக்டருக்கே ஐஸ்கிரீம் கொடுத்தவர் எங்க அப்பா; நடிகர் சூரி ஃப்ளாஷ்பேக்!
எந்த ஒரு துறையாக இருந்தாலும் நமது வேலையை நேர்மையாக செய்தால் அதற்கான பலன் நிச்சயம் வரும் என்று கூறுவார்கள். இந்த கூற்று சினிமா துறையை பொறுத்த வரை நடிகர் சூரிக்கு அப்படியே பொருந்தும்.சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பாக பெயிண்டர் முதல் எத்தனையோ வேலைகளை பார்த்திருப்பதாக சூரி கூறி இருக்கிறார். அதன் பின்னர், சின்னத்திரையில் சிறு பாத்திரங்களை ஏற்று நடித்த சூரிக்கு, வெண்ணிலா கபடி குழு திரைப்படம் வெளிச்சம் கொடுத்தது.அப்படத்தில் 50 பரோட்டாக்களை அசால்டாக சாப்பிடும் காட்சியின் மூலம் ரசிகர்களை வெகுவாக சிரிக்க வைத்திருப்பார் சூரி. அதன் பின்னர், பரோட்டா சூரி என்ற அடைமொழியுடன் தமிழ் சினிமாவில் காமெடியனாக வலம் வந்தார். அப்போது, வளர்ந்து வரும் நடிகர்களாக இருந்த சிவகார்த்திகேயன், விமல் தொடங்கி, ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் அளவிற்கு தனது திறமையால் சூரி முன்னேறினார்.இப்படி தொடர்ந்து காமெடியனாக நடித்த சூரிக்கு, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் கதையின் நாயகனாக நடிப்பில் அடுத்தகட்டத்தை சூரி எட்டிப்பிடித்தார். இந்தப் படம் விமர்சகர்கள் இடையே மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது.இதைத் தொடர்ந்து, கருடன் திரைப்படத்தில் கதாநாயகனாக சூரி நடித்தார். அப்படமும் வசூல் ரீதியில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதன் தொடர்ச்சியாக, சூரி, ஐஸ்வர்யா லெட்சுமி ஆகியோர் நடிப்பில் வெளியான மாமன் திரைப்படத்திற்கும் நல்ல வரவேற்கு கிடைத்தது. தற்போது, பல படங்களில் சூரி கதாநயகனாக நடித்து வருகிறார்.இந்நிலையில், வெண்ணிலா கபடி குழு திடைப்படம் வெளியான நேரத்தில், தனது தந்தை எவ்வாறு கிராம மக்களை திரையரங்கத்திற்கு அழைத்துச் சென்றார் என்ற சுவாரசிய தகவலை சூரி பகிர்ந்து கொண்டார். பிகைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலில் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் உடனான நேர்காணலின் போது இத்தகவலை சூரி தெரிவித்துள்ளார்.அதன்படி, “வெண்ணிலா கபடி குழு திரைப்படம் வெளியாகி இருந்த நேரத்தில், எங்கள் கிராமத்தில் இருந்து சுமார் 40 – 50 பேரை, லாரியில் திரையரங்கத்திற்கு எனது தந்தை அழைத்துச் சென்றார். மேலும், படத்தின் இடைவெளியின் போது அங்கிருந்த அனைவருக்கும் ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்துள்ளார்.அப்போது, அதே திரையரங்கில் கலெக்டரும் படம் பார்த்ததாக கூறினார்கள். அவரிடம் சென்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட என் தந்தை பின்னர் கலெக்டருக்கும் ஐஸ்கிரீம் கொடுத்துள்ளார்” என்று பழைய நிகழ்வுகளை சூரி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.