பொழுதுபோக்கு
கமல் நடித்த முதல் விளம்பர படம்; இயக்கியது சிம்பு பட நடிகரா? சிங்கிள் டேக் சூப்பர்ல!
கமல் நடித்த முதல் விளம்பர படம்; இயக்கியது சிம்பு பட நடிகரா? சிங்கிள் டேக் சூப்பர்ல!
நடிகர் கமல்ஹாசன் முதன்முதலாக நடித்த போத்தீஸ் நிறுவனத்தின் வணிக விளம்பரத்தை இயக்கிய தனது அனுபவத்தை, நடிகர் கிருஷ்ணா பகிர்ந்து கொண்டார். ரெட்நூல் யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் அளித்த நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சத்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் கிருஷ்ணா. இவர் ராஜிவ் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இதன் பின்னர், சுசி கணேசன் இயக்கிய ‘ஃபைவ் ஸ்டார்’ படத்தின் மூலம் நடிகராக சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தின் மூலம் இவருக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.குறிப்பாக, ‘ஆட்டோகிராஃப்’, ‘ஆயுத எழுத்து’, ‘திருடா திருடி’, ‘தாஸ்’, ‘ஆரண்ய காண்டம்’ போன்ற படங்களில் இவர் தோன்றியுள்ளார். மேலும், இயக்குநர் விஷ்ணு வர்தனின் படங்களில் தொடர்ந்து பணியாற்றிய அனுபவம் இவருக்கு இருக்கிறது. ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’, ‘சர்வம்’, ‘ஆரம்பம்’ போன்ற படங்கள் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றன. மேலும், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில், சிம்புவுடன் இவர் நடித்த சரவணா திரைப்படம், இவரது திரைப்பயணத்தில் பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில், கமல்ஹாசன் இடம்பெற்ற விளம்பரத்தை இயக்கிய அனுபவம் குறித்து சமீபத்தில் நடிகர் கிருஷ்ணா பகிர்ந்து கொண்டார். அதன்படி, “போத்தீஸ் நிறுவனத்திற்காக முதன்முதலில் கமல்ஹாசன் வணிக விளம்பரங்களில் நடிக்க தொடங்கினார். அந்த முதல் விளம்பரத்தை நான் தான் இயக்கினேன். எவ்வளவு பெரிய வசனத்தை கொடுத்தாலும் சுலபமாக பேசக் கூடிய ஆற்றல் அவருக்கு இருக்கிறது. அதனால், அந்த விளம்பரம் முழுவதையும் ஒரே டேக்காக எடுக்கலாம் என்று திட்டமிட்டோம். அதேபோல், எட்டாவது டேக்கில் விளம்பரம் ஓகே ஆனது. ஆனால், கூடுதலாக இரண்டு டேக்குகள் எடுத்திருந்தோம். அனைத்தையும் பார்த்த போது எட்டாவது டேக் சரியாக இருந்தது.உடனே, கமல்ஹாசனிடம் சாரி சார் என்று கூறினேன். ஆனால், கமல்ஹாசன் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. டேக் சரியாக இருந்தால் ஓகே தான் என்று கூறினார். அந்த அளவிற்கு சினிமா மீது அவருக்கு ஆர்வம் அதிகம். சினிமாவில் பணியாற்றும் அனைவருக்கும் இது தெரியும்” என்று நடிகர் கிருஷ்ணா தெரிவித்தார்.