இலங்கை
டிஜிற்றல் அடையாள அட்டை வீண் அச்சம் தேவையில்லை; அமைச்சர் நளிந்த தெரிவிப்பு
டிஜிற்றல் அடையாள அட்டை வீண் அச்சம் தேவையில்லை; அமைச்சர் நளிந்த தெரிவிப்பு
டிஜிற்றல் தேசிய அடையாள அட்டை செயற்றிட்டத்தின் ஊடாக நாட்டு மக்களின் தனிப்பட்ட தரவுகள் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்பது பொய்யானது சுவசெரிய அம்புலன்ஸ் சேவை நடைமுறைப்படுத்தப்பட்ட போதும் இவ்வாறு தான் குறிப்பிட்டார்கள். குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் நீதிமன்றத்தை நாடலாம். இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும்,அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றுமுன்தினம் நடந்த வாராந்தச் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் விமல் வீரவன்ஸவுக்கு தனது பெயர், பிறந்த திகதி உள்ளிட்ட விவரங்கள் எங்கேனும் செல்லும் என்ற பயம் உள்ளது. இந்த விடயத்தில் எவரும் அச்சமடைய தேவையில்லை. அதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. நாட்டு மக்களின் தனிப்பட்ட தரவுகள் ஆள்களைப் பதிவு செய்யும் திணைக்களத்திடம் உள்ளது. இந்தத் திணைக்களம் இந்தியாவுக்குரியதல்ல. இலங்கைக்குச் சொந்தமானது. டிஜிற்றல் தேசிய அடையாள அட்டை செயற்றிட்டத்துக்கு இந்திய அரசாங்கம் முழுமையாக ஒத்துழைப்பளிக்கிறது. செயற்றிட்டத்துக்கான செலவுகளில் 50 சதவீதம் இந்தியா நன்கொடையாக வழங்குகிறது. அதில் பங்கேற்கும் இந்திய நிறுவனம் விலைமனுக் கோரல் ஊடாகவே தெரிவு செய்யப்படும். இந்தச் செயற்றிட்டத்துக்கான பொறுப்பை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவே தனிப்பட்ட தரவு தொடர்பில் எவரும் அச்சமடையத் தேவையில்லை. விலை மனுக்கோரல் விவகாரத்தில் இந்தியா எவ்வித அழுத்தமும் பிரயோகிக்கவில்லை. இந்தியாவின் தொழில்நுட்ப சேவை இயலுமை தொடர்பில் அந்த நாட்டுடன் பேச்சில் ஈடுபட்டோம். இதன் பின்னரே இந்த செயற்றிட்டத்தை மீள ஆரம்பித்துள்ளோம் – என்றார்.