இலங்கை
கடற்றொழிலாளர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை
கடற்றொழிலாளர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை
அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு புத்தளம் முதல் கொழும்பு, காலி, மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கடற்சார் சமூகம் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புத்தளம் முதல் கொழும்பு, காலி, மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாலான பகுதிகளில் காற்றின் வேகம் இடைக்கிடையில் 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அப்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் புத்தளம் முதல் கொழும்பு, காலி, மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாலான பகுதிகளில் கடல் அலைகள் 2.5 முதல் 3.00 மீற்றர் வரை உயரக்கூடும்.
எனவே அப்பகுதிகளில் கடல் அலைகள் நிலத்தை நோக்கி வரக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன் புத்தளம் முதல் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை கடற்பகுதிகளில் அவதானத்துடன் செயற்படுமாறு கடற்சார் சமூகம் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.