இலங்கை
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு பிரத்தியேக பாதையூடாக சென்று வழிபட அனுமதி!
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு பிரத்தியேக பாதையூடாக சென்று வழிபட அனுமதி!
ஆடிப்பிறப்பன்று படைத்தரப்பு அறிவிப்பு
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பிரத்தியேக பாதை ஒன்றின் ஊடாகச் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள இராணுவத்தினர் ஆடிப்பிறப்பான நேற்று வியாழக்கிழமை முதல் அனுமதி வழங்கியுள்ளனர்.
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு கட்டுப்பாடுகள் இன்றி மக்கள் வழிபடுவதற்கான அனுமதியை 35 வருடங்களின் பின்னர், ஜூன் மாதம் 27ஆம் திகதி இராணுவத்தினர் வழங்கியிருந்தனர். ஆனால் ஜூன் மாதம் 28 ஆம் திகதி பாதுகாப்புக் காரணங்கள் எனக் கூறி ஆலயத்திற்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலே நேற்று முதல் ஆலயத்திற்குச் செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்படுவதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
35 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள குறித்த ஆலயத்துக்கு கடந்த ஆறுமாத காலத்துக்கு முதலே சுதந்திரமாக சென்று வழிபட அனுமதி வழங்கப்படும் என இராணுவத்தினர் அறிவித்திருந்த போதிலும் அது நடைமுறைக்கு வரவில்லை. விசேட தினங்களில் மாத்திரம் கடுமையான கட்டுப்பாடுகளுடன், ஆலயத்துக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ‘ஆலயத்துக்கு மாத்திரம் செல்வதற்கு’ என உயர்பாதுகாப்பு வலயத்தினுள் பிரத்தியேக பாதை அமைக்கப்பட்டு. அந்தப்பாதை ஊடாக மக்கள் ஆலயத்துக்கு மாத்திரம் சென்று வழிபட்டு திரும்ப இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
ஆலயத்துக்குச் செல்வதற்காக அந்தப் பகுதி மக்கள் தமது சொந்த நிதியிலேயே குறித்த பிரத்தியேகப் பாதையை அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.