பொழுதுபோக்கு
போஸ்டரில் அவன் பெயர் இருக்கு, நான் பண்ண மாட்டேன்; ஏ.வி.எம். படத்திற்கு இசையமைக்க மறுத்த இளையராஜா: எந்த படம் தெரியுமா?
போஸ்டரில் அவன் பெயர் இருக்கு, நான் பண்ண மாட்டேன்; ஏ.வி.எம். படத்திற்கு இசையமைக்க மறுத்த இளையராஜா: எந்த படம் தெரியுமா?
பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான முந்தானை முடிச்சு திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், இந்த படத்திற்கு இசையமைக்க முதலில் கமிட் ஆனவர் கங்கை அமரன். ஆனால் அதன்பிறகு இளையராஜா இசையமைக்க படக்குழு முடிவு செய்ததால், படத்தில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். இதற்காக பெரிய பஞ்சாயத்தே நடந்துள்ளது.இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் பாக்யராஜ். இவர் பெரும்பாலும் தான் இயக்கிய படங்களில் தானே நாயகனாக நடித்துள்ளார். அந்த பாக்யராஜ் இயக்கி நாயகனாக நடித்து கடந்த 1983-ம் ஆண்டு வெளியான படம் முந்தானை முடிச்சு. ஊர்வசி, கோவை சரளா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படத்தில் இளையராஜா இசையமைத்திருந்தார். கங்கை அமரன், முத்துலிங்கம், புலமைபித்தன் உள்ளிட்டோர் பாடல்கள் எழுதியிருந்தனர்.ஏ.வி.எம். நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. இந்த படத்தின் கதையை சொல்வதற்காக ஏ.வி.எம்.நிறுவனம் சென்றிருந்த இயக்குனர் பாக்யராஜ், அங்கு சரவணன், பாலசுப்பிரமணியன் ஆகியோரை சந்தித்து கதை கூறியுள்ளார். கதையை கேட்ட அவர்கள் ரொம்ப பிரமாதமாக இருக்கிறது என்ற சொல்லி, இந்த படத்திற்கு இளையராராஜா இசையமைத்தால் நன்றாக இருக்கும். இது கிராமத்து கதை என்பதால், அவரை இசையமைக்க வைக்கலாம் என்று கூறியுள்ளனர்.அதே சமயம், முந்தானை முடிச்சு படத்திற்கு முன்னதாக, பாக்யராஜ் இயக்கிய சில படங்களுக்கு இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் இசையமைத்திருந்தார். அதன் காரணமாக ஒரு பெரிய படம் வரட்டும் உனக்கு இசையமைக்க வாய்ப்பு தருகிறேன். கொஞ்சம் பொறுமையாக இரு என்று பாக்யாராஜ் கூறியுள்ளார். அதன் காரணமாக முந்தானை முடிச்சு படத்தில் கங்கை அமரனை இசைமைக்க வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளார் பாக்யராஜ்.அதன்படி, படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இயக்கம் பாக்யராஜ், இசை கங்கை அமரன் என்று இருந்துள்ளது. அதன்பிறகு கம்போசிங் சென்றுள்ளனர். அனால் ஏ.வி.எம். நிறுவனத்தினர் படத்திற்கு வியாபாரம் நன்றாக நடக்க வேண்டும் என்பதற்காக, இளையராஜாவை இசையமைக்க நீங்களே பேசி கொடுங்கள் என்று கேட்டுள்ளனர். இதை கேட்ட கங்கை அமரன் ஒன்றும் பிரச்னை இல்லை. நானே உங்களை அண்ணனிடம் கூட்டி போகிறேன் என்று ஏ.வி.எம். நிறுவனத்திரை இளையராஜாவிடம் அழைத்து சென்றுள்ளார் கங்கை அமரன்.இந்த முடிவுக்கு பாக்யாராஜ் ஒப்புக்கொள்ளாத நிலையில், இளையராஜா எனக்கு வேண்டாம் கங்கை அமரனே போதும் என்று கூறியுள்ளார். அதேபோல் இளையராஜாவும் இந்த படத்திற்கு இசையமைக்க முடியாது. படத்தின் விளம்பரத்தில் கங்கை அமரன் இசை அமைப்பதாக வந்துவிட்டது. இப்போது நான் இசையமைத்தால் அவன் வாய்பபை தட்டி பறித்தது போல் ஆகிவிடும் என்று கூறியுள்ளார். அதன்பிறகு ஏ.வி.எம். நிறுவனத்தினர் பிடிவாதமாக கேட்டதும் ஒப்புக்கொண்டார்.அதே சமயம், அதனைத் தொடர்ந்து இசை இளையராஜா பாடல்கள் கங்கை அமரன் என்று வந்தால் நான் இந்த படத்திற்கு இசைமைக்கிறேன் என்று கண்டிஷனுடன் ஒப்புக்கொண்டார் என்று கங்கை அமரன் ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார். முந்தானை முடிச்சு திரைப்படம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.