பொழுதுபோக்கு
சினிமா முதல் அரசியல் வரை… எம்.ஜி.ஆர்-க்கு போட்டியாக களம் இறக்கப்பட்ட முத்து!
சினிமா முதல் அரசியல் வரை… எம்.ஜி.ஆர்-க்கு போட்டியாக களம் இறக்கப்பட்ட முத்து!
சினிமா முதல் அரசியல் வரை அப்போதைய காலகட்டத்தில் கோலோச்சிய எம்.ஜி.ஆருக்கு போட்டியாக, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து களமிறக்கப்பட்டதாக பலரும் கூறி நாம் கேட்டிருப்போம். மு.க. முத்து, உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இந்நிலையில், சினிமா முதல் அரசியல் வரை அவர் கடந்து வந்த பாதையை இந்தப் பதிவில் பார்க்கலாம்.முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி – பத்மாவதி தம்பதிக்கு 1948-ஆம் ஆண்டில் முத்து பிறந்தார். இவரது தாயார் உயிரிழந்த நிலையில், தனது பாட்டியின் அரவணைப்பில் முத்து வளர்ந்தார். எனினும், சிறு வயதில் இருந்தே தனது தந்தையுடன் அரசியல் மேடைகளில் முத்து பங்கேற்றதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும், தி.மு.க-வின் கொள்கை விளக்க பாடல்களிலும் மு.க. முத்து தோன்றியதாக வரலாறு கூறுகிறது.சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கிய எம்.ஜி.ஆர், அரசியலிலும் கால் பதித்து தனது இருப்பை மிக உறுதியாக தக்க வைத்த காலகட்டத்தில், சுமார் 1970-களில் அவருக்கு போட்டியாக மு.க. முத்துவை, கருணாநிதி களமிறக்கியதாக கூறுகின்றனர். நடை, உடை, பாவனை என அனைத்திலும் மு.க. முத்துவிடம், எம்.ஜி.ஆரின் சாயல் மிக அதிகமாக காணப்பட்டது. அப்படி ஒரு பிம்பத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் முத்துவை களமிறக்கியதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.அதன்படி, ‘பூக்காரி’, ‘அணையா விளக்கு’, ‘சமையல்காரன்’, ‘இங்கேயும் மனிதர்கள்’, ‘பிள்ளையோ பிள்ளை’ போன்ற படங்களில் மு.க. முத்து கதாநாயகனாக நடித்தார். எம்.ஜி.ஆர் பாணியில் இவரது திரைப்படங்கள் அமைந்தாலும், எம்.ஜி.ஆருக்கு கிடைத்த வரவேற்பு முத்துவிற்கு கிடைக்கவில்லை என்பது நிதர்சனம். ஆனால், இவரது பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. இதற்கு உதாரணமாக ‘எந்தன் மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’, ‘காதலின் பொன் வீதி’ உள்ளிட்ட சில பாடல்களை கூறலாம். தொலைக்காட்சியில் பழைய பாடல்களை ஒளிபரப்பும் நிகழ்ச்சியில், இந்த பாடல்கள் கட்டாயம் இடம்பெறும்.எம்.ஜி.ஆருக்கு போட்டியாக மு.க. முத்து களமிறக்கப்பட்டார் என்ற பேச்சு பரவலாக இருந்த காலகட்டத்தில், அவர் நடித்த ‘பிள்ளையோ பிள்ளை’ படப்பிடிப்பை, எம்.ஜி.ஆர் கிளாப் போர்டு அடித்து தொடங்கி வைத்த சம்பவம் அரங்கேறியது. இதன் மூலம் இருவருக்கும் இடையே ஒரு நல்ல புரிதல் இருந்ததாகவும் பேச்சு நிலவியது. இதனிடையே, சிவகாம சுந்தரி என்பவருடன் மு.க. முத்துவிற்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த தம்பதிக்கு அறிவுநிதி என்ற மகனும், தேன்மொழி என்ற மகளும் பிறந்தார்கள்.சினிமா மற்றும் அரசியல் ஆகிய இரண்டிலும் மு.க. முத்துவால் பெரிய அளவில் ஜொலிக்க முடியாமல் போனது. இந்த சூழலில் கருணாநிதிக்கும், முத்துவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் எழுந்ததாகவும், இதன் விளைவால் முத்து தனியாக சென்று வசிக்கத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர், அரசியல், சினிமா உள்ளிட்ட பொது வாழ்வில் இருந்து மு.க. முத்து முற்றிலும் விலகிக் கொண்டார்.உடல் நலக்குறைவால் பல ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த மு.க. முத்து, இன்று (ஜூலை 19) காலமானார். இதைத் தொடர்ந்து, அரசியல் பிரமுகர்கள் தொடங்கி, சினிமா நட்சத்திரங்கள் வரை பலரும் இரங்கள் தெரிவித்துள்ளனர்.