பொழுதுபோக்கு
‘பாட்ஷா’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது பயமாக இருந்தது; நடிகர் ராஜு ஜெயமோகன் ஓபன் டாக்
‘பாட்ஷா’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது பயமாக இருந்தது; நடிகர் ராஜு ஜெயமோகன் ஓபன் டாக்
கோவையில் உள்ள பிராட்வே சினிமாஸ் வளாகத்தில் ‘பன் பட்டர் ஜாம்’ திரைப்படக் குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் ராஜு ஜெயமோகன், பவ்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர்.இன்று செய்தியாளர்களை சந்தித்த இத்திரைப்படக் குழுவினர், “பன் பட்டர் ஜாம் திரைப்படம் ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், பெண்கள் மத்தியில் அதிகமான வரவேற்பைப் பெற்றுள்ளது. குடும்பங்களாக பலரும் வந்து திரைப்படத்தைப் பார்த்து செல்கிறார்கள்” என்று தெரிவித்தனர்.ஒரே நாளில் அதிகமான திரைப்படங்கள் வெளியாகும் பொழுது, எத்தனை திரைகளில் ஒரு படம் வெளியாகும் என்பதை நடிகர்கள், இயக்குனர்கள் முடிவு செய்வதில்லை என்றும், அது இயற்கையாகவே எவ்வாறு நடக்கிறது என்பது தங்களுக்குத் தெரியாது என்றும் ராகவ் மிர்தாத் குறிப்பிட்டார்.தன்னை பலருக்கும் அடையாளம் காட்டியது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தான் என்று கூறிய நடிகர் ராஜு ஜெயமோகன், “ஒரு திரைப்படத்தில் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் இரண்டையும் கூறுவது விமர்சனமாக இருக்கும். அதைத் தவிர்த்து கிண்டல் செய்வது தவறு என்று நான் நினைக்கிறேன்” என தெரிவித்தார்.’பாட்ஷா’ திரைப்படம் மீண்டும் வெளியானபோது சற்று பயமாக இருந்தது என்று கூறிய ராஜு, “நம்முடைய படம் ஓடும்போது அருகில் ரஜினிகாந்த் படமும் ஓடுகிறது என்பது பெருமையாக உள்ளது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.நீண்ட இடைவெளிக்கு பிறகு இத்திரைப்படத்தில் நடிகர் விக்ராந்த் நடித்துள்ளார். அவரது வருகைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். படத்தின் பெயர் குறித்து பேசிய இயக்குனர், சிறுவயதில் அனைவரும் சாப்பிட்ட ஏதேனும் ஒரு உணவு மிகவும் பிடித்திருக்கும் என்பதால், எதார்த்தமாகவே ‘பன் பட்டர் ஜாம்’ என்ற பெயர் அமைந்தது என்று கூறினார்.