இந்தியா

புதுச்சேரி அரசியலில் மத, ஜாதிப் பிரிவினை; காங்கிரஸ் கூட்டணிக்கு அன்பழகன் கடும் கண்டனம் – தேர்தல் ஆணையத்தில் புகார்

Published

on

புதுச்சேரி அரசியலில் மத, ஜாதிப் பிரிவினை; காங்கிரஸ் கூட்டணிக்கு அன்பழகன் கடும் கண்டனம் – தேர்தல் ஆணையத்தில் புகார்

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி மதரீதியாகவும், ஜாதியின் அடிப்படையிலும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி வாக்குகளைப் பெற முயற்சிப்பதாக அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அதிமுக) மாநில செயலாளர் அன்பழகன் வன்மையாகக் கண்டித்துள்ளார். மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறி இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அன்பழகன் கூறியதாவது:- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் ஏற்பட்டுள்ள எழுச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல், திமுகவின் தூண்டுதலின் பேரில் கம்யூனிஸ்ட் கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர் என்றார். தங்கள் கொள்கைகளில் உறுதியாக இல்லாமல், திமுகவிடம் ஆதாயம் பெற்றுக்கொண்டு கொள்கை முரண்பாட்டுடன் செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிமுகவைப் பற்றியோ அதன் ஆற்றல் மிக்க பொதுச்செயலாளர் எடப்பாடியார் பற்றியோ பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை என்றார்.கேரளாவில் காங்கிரஸ் செயல் தலைவர் ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சித்தாந்தம் இரண்டும் ஒன்றே என்று ஒப்பிட்டுப் பேசியுள்ளார். கேரளாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ராகுலின் பேச்சை எதிர்த்துள்ளன. ஆனால், தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகள் ராகுலை எதிர்க்க முடியாமல் உள்ளனர். மாநிலத்திற்கு மாநிலம் கொள்கை முரண்பாடாக செயல்படும் கம்யூனிஸ்ட்டுகள் தங்களை திருத்திக் கொள்வது நல்லது.நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ₹15 கோடியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.10 கோடியும் திமுக தேர்தல் செலவாக வழங்கியதாக திமுக தலைவர் ஸ்டாலின், திமுகவின் தேர்தல் வரவு செலவு கணக்கில் குறிப்பிட்டுள்ளார். பிற கட்சியிடம் ஆதாயம் பெறுவதுதான் கம்யூனிஸ்ட்டுகளின் அழகா என எங்கள் கழக பொதுச்செயலாளர் தேர்தல் பிரசாரத்தில் தற்போது குறிப்பிட்டார்.இதற்குப் பதிலளித்த கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர், திமுகவிடம் பெற்ற ரூ.10 கோடியை தங்கள் கட்சி பெற்ற இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளின் செலவுக்கு செலவு செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழகத்தில் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு ரூ.95 லட்சம் மட்டுமே செலவு செய்ய வேண்டும். அதற்கு மேல் செலவு செய்தால், அவர்கள் வெற்றி பெற்றிருந்தாலும் அவர்களின் வெற்றி செல்லாததாகிவிடும். இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ரூ.1.80 கோடி செலவு செய்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் ரூ.10 கோடியையும் செலவு செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். எனவே, இவர்கள் வெற்றி பெற்றது செல்லாது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும். இது சம்பந்தமாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அனுமதி பெற்று அதிமுக சார்பில் புகார் கடிதம் அனுப்பப்படும்.புதுச்சேரியில் மதரீதியாகவும், ஜாதியின் அடிப்படையிலும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி வாக்குகளைப் பெற காங்கிரஸ் கூட்டணி முற்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தற்போதைய புதுச்சேரி அமைச்சரவையில் ஏற்கனவே இருந்த 2 தலித் அமைச்சர்கள் பல்வேறு காரணங்களுக்காக விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சனையை காங்கிரஸ் பூதாகாரமாக ஜாதி ரீதியில் பேசுகிறது. புதுச்சேரி அரசியல் வரலாற்றில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இல்லாதது இந்த அரசில் மட்டும்தான் எனப் பொய் பேசுகின்றனர்.1985-ல் திரு. பரூக் அவர்கள் ஆட்சியிலும், அவரைத் தொடர்ந்து திரு. வைத்தியலிங்கம் அவர்களது ஆட்சியிலும் எந்த தலித்தும் அமைச்சர்களாக இல்லை. 1996 ஜனகிராஜன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் திரு. கண்ணன், தேனீ. ஜெயக்குமார், விஸ்வநாதன், நாஜீம், எஸ்.பி. சிவக்குமார் ஆகியோர் அமைச்சர்களாக இருந்தனர். ஆனால், அந்த அமைச்சரவையிலும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் அமைச்சர்களாக இல்லை. இதையெல்லாம் வசதியாக மறந்துவிட்டு தலித் மக்களுக்கு உண்மையாக இருப்பதாக திமுகவும், காங்கிரசும் நாடகம் நடத்துகின்றனர்.  காரைக்கால் பிராந்தியம் கஞ்சா, கஞ்சா ஆயில் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொள்முதல் செய்யப்படும் மாவட்டமாக தொடர்ந்து செயல்படுகிறது. இதன் பேரில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காமல் ஆதாயம் பெற்றுக் கொண்டு வேடிக்கை பார்க்கிறது என்று ஏற்கனவே அதிமுக சார்பில் கூறியுள்ளோம். பள்ளி மாணவர்கள் முதல் பல்வேறு மக்களும் போதை நடமாட்டத்தால் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். மக்கள் அதிகம் கூடும் பல இடங்களில் போதைப்பொருட்கள் தங்குதடையின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், ஆந்திராவிலிருந்து கடல் மார்க்கமாக காரைக்கால் மாவட்டத்திற்கு தினந்தோறும் பல டன் கணக்கில் போதைப்பொருட்கள் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து இலங்கைக்கு கடத்தப்படுவது அன்றாட நிகழ்வாக உள்ளது. அவ்வாறு கடத்தப்படுவதில் ஏற்பட்டுள்ள கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் காவல்துறை சிறப்பு பிரிவுக்கு அனுப்பப்பட்ட புகாரின் அடிப்படையில் புதுச்சேரி சிறப்பு பிரிவினரால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சமீபகாலமாக காவல்துறை தனது கம்பீரத்தை இழந்துள்ளதாகத் தெரிகிறது. சில வருடங்களாக காவல்துறையின் உட்கட்டமைப்பு செல்லரிக்கப்பட்டு உச்சகட்ட கோஷ்டி பூசலில் சிக்கித் தவித்து வருகிறது. உள்துறை அமைச்சர் அவர்களும், முதலமைச்சரும் காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தை கூட்டிப் பேச வேண்டும். புதுச்சேரியில் முழுமையாக பேனர் தடை சட்டத்தை கூட அமல்படுத்த முடியாத நிர்வாகமாக அரசு நிர்வாகம் உள்ளது என்றும் அன்பழகன் கூறினார். இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது மாநில கழக இணைச் செயலாளர் ஆர்.வி. திருநாவுக்கரசு, மாநில கழகத் துணைச் செயலாளர் எம். நாகமணி ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version