இந்தியா
மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் ரம்மி விளையாடிய அமைச்சர்; ‘ஜனநாயகத்திற்கு அவமானம்’ – எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்
மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் ரம்மி விளையாடிய அமைச்சர்; ‘ஜனநாயகத்திற்கு அவமானம்’ – எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்
மகாராஷ்டிரா வேளாண் அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே, ஞாயிற்றுக்கிழமை சர்ச்சையின் மையத்தில் சிக்கினார். சட்டமன்றத்தில் அவர் தனது தொலைபேசியில் ஆன்லைன் கார்டு விளையாட்டான ‘ஜங்லீ ரம்மி’ விளையாடியதாகக் கூறப்படும் வீடியோ, தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார் அணி) தலைவர் ரோகித் பவார் சமூக ஊடகங்களில் வெளியிட்ட பிறகு இந்த சர்ச்சை ஏற்பட்டது.ஆங்கிலத்தில் படிக்க:வீடியோவைப் பகிர்ந்த ரோகித் பவார், “தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார் தலைமையிலானது), பா.ஜ.க-வுடன் கலந்தாலோசிக்காமல் எதுவும் செய்ய முடியாது. அதனால் தான், ஏராளமான விவசாயப் பிரச்னைகள் நிலுவையில் உள்ளபோதும், மகாராஷ்டிராவில் தினமும் 8 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும்போதும், வேளாண் அமைச்சருக்கு எந்த வேலையும் இல்லாதது போல தெரிகிறது, அவர் ரம்மி விளையாடி நேரத்தை செலவிடுகிறார்.” சின்னர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிப் பிரிவின் எம்.எல்.ஏ-வாக கோக்டே உள்ளார்.இந்த வீடியோவுக்கு பதிலளித்த பா.ஜ.க தலைவர் சுதீர் முங்கந்திவார், “அமைச்சர் கோக்டே மீது நடவடிக்கை எடுக்க எந்த சட்டமும் இல்லை. அதிகபட்சமாக, அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்படும்… இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு சட்டம் இயற்றும்படி முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் கூறியிருந்தேன். ஆனால், மத்திய அரசிடம் தான் இந்த உரிமை உள்ளது என அவர் கூறினார்.” என்று கூறினார்.சிவசேனா (உத்தவ் பால்தாக்கரே பிரிவு) தலைவர் கிஷோர் பெட்னேகர் கூறுகையில், ”அமைச்சர் கோக்டே தவறிழைப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னரும் அவர் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அவர் நடந்துகொள்ளும் விதம் ஜனநாயகத்திற்கு அவமானம் என்பதில் சந்தேகமில்லை.” என்றார்.பெட்னேகர் மேலும், “ஒரு காலத்தில் எம்.எல்.ஏ-க்கள் மிகவும் மதிக்கப்பட்டனர். ஆனால், இன்று அவர்கள் நாளுக்கு நாள் கீழ்மட்டத்தில் இறங்குகிறார்கள்” என்றார்.தேசியவாத காங்கிரஸ் கட்சி (எஸ்.பி) எம்.எல்.ஏ ஜிதேந்திரா அவாத் கூறுகையில், “அவர் எங்கே ரம்மி விளையாடுகிறார்? அவர் மாநில சட்டமன்றத்திற்குள் விளையாடுகிறார். கோக்டே ஒரு அமைச்சர், ஆனால், அவர் சபையில் ஒரு கேள்விக்கு கூட பதிலளிக்கவில்லை. பல குடும்பங்களை மகாராஷ்டிராவில் அழித்த ‘ஜங்லீ ரம்மி’ விளையாட்டை அமைச்சர் விளையாடுவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அமைச்சர்களுக்கு வெட்கம் இல்லை, மாநில சட்டமன்றத்தின் மீது எந்த மரியாதையும் இல்லை. இப்போது துணை முதல்வர் அஜித் பவார் எப்படி பதிலளிப்பார் என்று பார்க்க ஆவலாக உள்ளேன். அவர் என்ன செய்வார் என்று நான் ஆவலுடன் இருக்கிறேன்.”கர்நாடக சட்டமன்றத்தில், சில உறுப்பினர்கள் தங்கள் செல்போன்களைப் பார்த்தபோது, அவர்கள் வீட்டிலேயே அமர வைக்கப்பட்டனர் என்று அவாத் கூறினார்.விவசாயிகளின் பிரச்சினைகளில் அமைச்சர்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால், அவர்கள் தற்போது நடந்துகொள்வது போல் நடந்திருக்க மாட்டார்கள் என்று அவாத் கூறினார். “மாநில சட்டமன்றம் ஜனநாயகத்தின் கோவில், ஆனால், இந்த கோவிலில் அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்று பாருங்கள்,” என்றார்.சிவசேனா (உத்தவ் பால்தாக்கரே பிரிவு) செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறுகையில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியேற்ற விரும்பும் 4 அமைச்சர்களில் கோக்டேவும் ஒருவர்.” என்றார்.