இந்தியா
சட்டவிரோத பணி நியமனம்: நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய புதுச்சேரி முன்னாள் தலைமை செயலர்
சட்டவிரோத பணி நியமனம்: நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய புதுச்சேரி முன்னாள் தலைமை செயலர்
புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரியில் சட்டவிரோதமாக பணி நியமன விவகாரத்தில் அப்போதைய தலைமை செயலர் ராஜீவ் வர்மா நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். மேலும் தான் ஒப்புதல் வழங்கவில்லை துணைநிலை ஆளுநரே நேரடியாக கோப்புக்கு அனுமதி வழங்கியதாக தனது பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார் .புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரியில் பல்நோக்கு ஊழியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் என 1000 ஊழியர்கள் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு அனைவரும் பணிநிரந்தரமும் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து, கோபிக்கண்ணன் உள்ளிட்ட 10 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் கொல்லைப்புற நியமனம் நடந்து வருகிறது. இதனால் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நேரடி நியமனம் நியமனம் மூலம் மேற்கண்ட பதவிகளை நிரப்ப வேண்டும் என்றும், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரியும் அப்போதைய தலைமை செயலர் ராஜீவ்வர்மா, செயலர் மணிகண்டன் ஆகியோருக்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த வழக்கை கடந்த பிப்ரவரி மாதம் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். பொதுப்பணித்துறை உள்ளிட்ட எந்தவொரு அரசு துறையாக இருந்தாலும் சட்டவிரோத நியமனம் கூடாது. நேரடி நியமனம் மூலம் ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டு, ஒரு வருடம் கடந்த நிலையில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்றுக் குறிப்பிட்டு புதுச்சேரியின் முன்னாள் தலைமை செயலர் ராஜீவ் வர்மா உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த முன்னாள் தலைமை செயலர் ராஜீவ் வர்மா கடந்த 7 ஆம் தேதி நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.அதில், “நான் தற்போது சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் தலைமை செயலராக பணியாற்றி வருகிறேன். கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதியில் இருந்து 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் தேதி வரை புதுச்சேரி தலைமை செயலராக பணியாற்றிய காலத்தில், எனக்குத் தெரிந்த உண்மைகளின்அடிப்படையிலும் இந்த பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்கிறேன். தற்போது புதுச்சேரியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளேன். எந்த கோப்புகளையும், என்னால் நேரடியாகஅணுக முடியாது. எனது நினைவிலிருந்தும் பெறப்பட்ட தகவல்களை நீதிமன்றத்தில் நான் சமர்ப்பிக்கிறேன். முதலில் நான் எனது நிபந்தனை யற்ற மன்னிப்பை நீதிமன்றத்துக்கு மிகுந்த மரியாதையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை, நீதிமன்றத்தின் கண்ணியத்தையும் மகத்துவத்தையும் குறைமதிப்புக்கு உட்படுத்தும் எதையும் நான் செய்யவில்லை. மற்ற அனைத்து குற்றச்சாட்டுகளையும் நான் மறுக்கிறேன்.இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், சில ஊழியர்களை பணியமர்த்தப்பட்டதில், அப்போதைய கவர்னரால் நேரடியாக செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி ஆட்சேர்ப்புவிதிகளை மீறி ஊாழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்வதை நான் எதிர்த்தேன். இதனால் அப்போதைய சுகாதார செயலாளர் அந்தக் கோப்பை நேரடியாக முதல்வருக்கு அனுப்பினார். அவர் அப்போதைய துணைநிலை ஆளுநருக்கு முன்மொழிவை அனுப்பி துணைநிலை ஆளுநரே இந்த கோப்புக்கு ஒப்புதல் அளித்தார். எனவே, நான் இதற்கு எந்த ஒப்புதலும் அளிக்கவில்லை. நாள் ஏற்கனவே மாற்றப்பட்டுள்ளதால், புதுச்சேரி தொடர்பான எந்தவொரு விஷயத்திலும் நிர்வாக உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது. எனவே எனக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்வது அவசியமில்லை. எனவே, என் மீதான அவமதிப்பு மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டியதாகும். எனது பதவிக் காலத்தில் விதிகள் அல்லது நடைமுறைக்கு முரணான எந்தவொரு நியமனத்தையும் நான் அங்கீகரிக்கவில்லை. இதுபோன்ற சூழலில் நிபந்தனையற்ற மன்னிப்புக்கோகுவதோடு, இந்த நீதிமன்ற அவமதிப்பு மனுவை தள்ளுபடி செய்யுமாறு கேட்டுக்கொள் றேன்.”என்று அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ள, வழக்கறிஞரிடம் கேட்டபோது, “சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டவர்களை பணி நீக்கம் செய்ய நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. ஒரு ஆண்டாக இதனை செய்யாமல், அப்போதையதலைமை செயலர் பிரமாணப்பத்திரம் என திசை திருப்புவதாக அறிகிறோம். நீதிமன்ற உத்தரவை நிறை வேற்றுமாறு பதில் மனு தாக்கல் செய்வோம்” என்று கூறினார். செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.