பொழுதுபோக்கு
சிவாஜிக்கு பாடுறது ரொம்ப கஷ்டம்; எம்.ஜி.ஆர்-க்கு ஈசி; ஏன் தெரியுமா? பாடிக் காட்டிய டி.எம்.எஸ்
சிவாஜிக்கு பாடுறது ரொம்ப கஷ்டம்; எம்.ஜி.ஆர்-க்கு ஈசி; ஏன் தெரியுமா? பாடிக் காட்டிய டி.எம்.எஸ்
டி.எம். சௌந்தரராஜன், எம்.ஜி. ராமச்சந்திரன், மற்றும் சிவாஜி கணேசன் ஆகிய மூவரும் தமிழ் சினிமாவின் பொற்காலத்தை செதுக்கிய தனித்துவமான ஆளுமைகள் ஆவர். எம்.ஜி.ஆரின் பெரும்பான்மையான படங்களுக்கு டி.எம்.எஸ் தான் பின்னணி பாடினார். எம்.ஜி.ஆரின் கம்பீரமான தோற்றத்திற்கும், அவரது கொள்கை பாடல்களுக்கும் டி.எம்.எஸ்-இன் குரல் மிகச்சரியாகப் பொருந்திப் போனது. “நான் ஆணையிட்டால்”, “அதோ அந்தப் பறவை போல”, “நல்ல நல்ல பிள்ளைகளை” போன்ற எண்ணற்ற பாடல்கள் எம்.ஜி.ஆர் படங்களுக்கு டி.எம்.எஸ்-இன் குரலில் உயிர் கொடுத்தன.எம்.ஜி.ஆர் தனது பாடல்கள் மூலம் மக்கள் மத்தியில் தான் பரப்ப விரும்பிய கருத்துக்களுக்கு, டி.எம்.எஸ்-இன் குரல் ஒரு பாலமாக அமைந்தது. இருவருக்கும் இடையே ஒரு அசைக்க முடியாத தொழில்முறை பந்தம் இருந்தது, எம்.ஜி.ஆர் தனது பாடல்களில் டி.எம்.எஸ்-இன் பங்களிப்பை பெரிதும் மதித்தார். அதேபோல் சிவாஜி கணேசனின் நடிப்புக்கு குரல் கொடுப்பது ஒரு சவால் என டி.எம்.எஸ் அடிக்கடி குறிப்பிட்டிருக்கிறார். சிவாஜியின் முகபாவனைகள், உடல் மொழி, உணர்ச்சி வெளிப்பாடுகள் இவற்றுக்கு ஏற்ப குரலில் நுணுக்கமான மாற்றங்களை டி.எம்.எஸ் கொண்டு வந்தார். உதாரணமாக, “வசந்த மாளிகை” படத்தில் வரும் “மயக்கம் என்ன”, “ஞானப்பசு” போன்ற பாடல்களில் சிவாஜியின் உணர்ச்சிகளை உள்வாங்கி டி.எம்.எஸ் பாடிய விதம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. சிவாஜி தனது படங்களில் நடிப்பின் பல பரிமாணங்களைக் காட்டும்போது, டி.எம்.எஸ் தனது குரலில் அந்தப் பரிமாணங்களை பிரதிபலித்தார். “பூ முடிப்பாள் இந்த பூங்குழலி” போன்ற சவாலான பாடல்களை கூட சிவாஜிக்காக அற்புதமாகப் பாடினார். எம்.ஜி.ஆருக்கு ஒரு விதமாகவும், சிவாஜிக்கு ஒரு விதமாகவும் குரலை மாற்றிப் பாடுவதில் டி.எம்.எஸ் தனித்துவமானவர்.இந்நிலையில் தமிழ் பீபுல் யூடியூப் பக்கத்தில் டி.எம்.எஸ் அவர்களின் பழைய நேர்காணல் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் அவர் சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆருக்கு பாடல் பாடும் விதம் குறித்து பேசியுள்ளார். சிவாஜிக்கு பாடுவது ஏன் கடினம், எம்.ஜி.ஆருக்கு ஏன் எளிது என்பதை பிரபல பின்னணிப் பாடகர் டி.எம். சௌந்தரராஜன் (டி.எம்.எஸ்) விளக்கிய ஒரு சுவாரஸ்யமான நிகழ்வுதான் இது.”நான் ஆணையிட்டால்” என்ற பாடலை உதாரணமாகக் கொண்டு, எம்.ஜி.ஆருக்காகப் பாடும்போது குரல் இயல்பாகவும், எளிதாகவும் வரும் என்றும், ஆனால் சிவாஜிக்கு அதே பாடலைப் பாடும்போது, அடிவயிற்றில் இருந்து முழு ஆழத்துடன் கொடுக்க வேண்டும் என்றும் டி.எம்.எஸ் குறிப்பிடுகிறார். சிவாஜியின் நடிப்புக்கு ஏற்ப குரலில் வேகம் மற்றும் உணர்வுகளைக் கொண்டுவர வேண்டும் என்பதால் அது சவாலானது என்கிறார்.எம்.ஜி.ஆர் பேசும் பாணியை “என்னயா பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு வரவே மாட்டேங்கறீங்க” என்ற குரல் தொனியிலும், சிவாஜியின் பாணியை “என்ன இன்னும் உன்ன பார்த்து ரொம்ப அழச்சிு வரவே இல்லையே” என்ற குரல் தொனியிலும் டி.எம்.எஸ் நடித்துக் காட்டினார்.மேலும், “ஓ மை லார்ட்” படத்திற்காக சிவாஜிக்கு ஒரு ஆங்கில வசனத்தைப் பாடிய அனுபவத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார். சிவாஜி ஒரு பெரிய மேதை என்றும், அவருக்கே உரித்தான பாணியில் வசனங்களைப் பேசும் திறமை கொண்டவர் என்றும் டி.எம்.எஸ் பாராட்டினார். இந்த நிகழ்வு டி.எம்.எஸ்-இன் பன்முகத் தன்மையையும், நடிகர்களின் தனித்துவமான பாணிகளை உள்வாங்கிப் பாடும் அவரது திறமையையும் வெளிப்படுத்துகிறது.