இலங்கை
செம்மணி அகழ்வுப்பணி மீள ஆரம்பம்; நேற்று ஒரேநாளில் மட்டும் ஏழு என்புத்தொகுதிகள்!
செம்மணி அகழ்வுப்பணி மீள ஆரம்பம்; நேற்று ஒரேநாளில் மட்டும் ஏழு என்புத்தொகுதிகள்!
செம்மணி மனிதப்புதைகுழியின் அகழ்வுப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் ஏழு என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அரியாலை – சித்துப்பாத்தி மயானத்தில் அவதானிக்கப்பட்ட மனிதப் புதைகுழி மீதான அகழ்வு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 45 நாள்களைக் கொண்ட அகழ்வுப் பணிகளின் முதல் 15 நாள்கள் நிறைவடைந்ததும், பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாம் பகுதிக்கான பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, ஏழு மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
தடயவியல் அகழ்வாய்வுத்தளம் ஒன்றிலிருந்து 4 என்புத் தொகுதிகளும், தடயவியல் அகழ்வாய்வுத் தளம் இரண்டிலிருந்து 3 என்புத் தொகுதிகளுமே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி, செம்மணி மனிதப்புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத்தொகுதிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 72ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 65 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில், துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் ஆணையாளர் மிராக் ரஹீம், காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி நிறஞ்சன், சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினர் ஆகியோர் நேற்றைய அகழ்வுப்பணிகளின் போது முன்னிலையாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.