இலங்கை

தற்போதைய கல்வி முறைகளால் பிள்ளைகளுக்கு இயந்திரச்சுமை; ஜனாதிபதி அநுர காட்டம்

Published

on

தற்போதைய கல்வி முறைகளால் பிள்ளைகளுக்கு இயந்திரச்சுமை; ஜனாதிபதி அநுர காட்டம்

தற்போதைய கல்வி முறையால், சிறுவர்களின் ‘பருவ வாழ்க்கை பறிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இயந்திரச்சுமை ஏற்றப்பட்டுள்ளது. இதில் உடனடியாக மாற்றங்கள் கொண்டுவரப்படும் – இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க. கல்வி மறுசீரமைப்புத் தொடர்பில் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று அவர் மேலும் தெரிவித்ததாவது:-

தற்போதைய கல்விமுறை தொடர்பில் எவரும் திருப்தியடைய முடியாது. கல்வி முறையை மறுசீரமைக்கும்போது பலரும் பாடத்திட்டங்கள் தொடர்பில் கருத்துகளை வெளிப்படுத்துகின்றனார். ஆனால், நான் கூறுவது என்னவென்றால் நாம் முன்னெடுக்கும் மறுசீரமைப்பு பாடத்திட்டங்களை மட்டுமே இலக்காகக் கொண்டதல்ல. நாட்டை மாற்றத்துக்குக் கொண்டு செல்லக்கூடிய மறுசீரமைப்பையே நாங்கள் முன்னெடுக்கவுள்ளோம்.

Advertisement

இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக எம்மிடம் இருக்கும் முக்கியமான வளமாக மனித வளங்களே உள்ளன. இதனால் மனித வளத்தை பலப்படுத்தி எவ்வாறு நாட்டை புதிய நிலைக்கு கொண்டு செல்லலாம் என்றே கருதுகின்றோம். வறுமை நிலையில் இருந்து மீட்கவும். குற்றங்களை குறைக்கவும் கல்வி முக்கியமானது. ஆதலால், கல்வித்துறை முகம்கொடுத்துள்ள நெருக்கடிக்கு தீர்வு காணவேண்டும். இன்று ஏராளமான பிள்ளைகள் கல்வியில் இருந்து இடைவிலகியுள்ளனர். இதை அனுமதிக்க முடியாது. 13 வருடக் கல்வியை நாங்கள் உத்தரவாதப்படுத்த வேண்டும்.

இலங்கையில் 18 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற வகையில் ஆசிரியர்கள் காணப்படுகின்றனர். அவ்வாறு இருந்தும், சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. ஏனெனில், கடந்த காலங்களில் ஆசிரிய ஆளணியை சரியான வகையில் முகாமை செய்யவில்லை. 2023ஆம் ஆண்டில் ஒரு மாணவரும் சேர்க்கப்படாத 98 பாடசாலைகள் உள்ளன. அத்துடன் 10 மாணவர்களுக்கும் குறைவான எண்ணிக்கையுடைய 115 பாடசாலைகள் உள்ளன. 20 மாணவர்களுக்கும் குறைவான எண்ணிக்கையுடைய 406 பாடசாலைகளும் 30 மாணவர்களுக்கும் குறைவான எண்ணிக்கையுடைய 752 பாடசாலைகளும் 50க்கும் குறைவான மாணவர்களை கொண்ட  ஆயிரத்து 506 பாடசாலைகளும் உள்ளன. நாட்டில் உள்ள பாடசாலைகளில் 15 வீதமானவை 50க்கும் குறைவான மாணவர்களை கொண்டுள்ளன. 100 மாணவர்களை விடவும் குறைவான எண்ணிக்கை கொண்ட 3 ஆயிரத்து 144 பாடசாலைகள் உள்ளன. இதன்படி அரச பாடசாலைகளில் மூன்றில் ஒரு பங்கில் நூற்றுக்கும் குறைவான மாண வர்களே உள்ளனர். இதனால் பாட சாலைக் கட்டமைப்புகள் தொடர்பில் மீளாய்வு செய்ய வேண்டும். இந்த தீர்மானத்தை நாங்கள் நிச்சயம் எடுப்போம். சில பாடசாலைகளை மூட வேண்டும். சில பாடசாலைகளை இணைக்க வேண்டும். சில இடங்களில் புதிதாக பாடசாலை களை ஆரம்பிக்கவேண்டியுள்ளது.

தற்போதைய கல்வி முறையால், இயந்திரங்கள் போன்றே பிள்ளைகள் வளர்க்கப்படுகின்றனர். அதிகாலை 4 மணிக்கு மேலதிக வகுப்பு நடக்கின்றது. அந்த வகுப்பு முடிந்து பாடசாலை சென்று பின்னர் மாலை நேர வகுப்புக்கு போகின்றனர். அதிகாலை ஒரு மணி வரையிலும் அவ்வாறு கற்கவேண்டியுள்ளது. பிள்ளைகளுக்கு சிறுவர் வாழ்வு அவசியமில்லையா? இது பாவமான செயலாகும். இதை அனுமதிக்கமுடியாது. எனவே. நாங்கள் விரைவான மறுசீரமைப்பைச் செய்தே தீருவோம் – என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version