இலங்கை
யாழ்.புதிய பேருந்து நிலையத்திலிருந்தே இ.போ.ச., தனியார்; நெடுந்தூர சேவை – ஓகஸ்ட் முதல் நடைமுறை
யாழ்.புதிய பேருந்து நிலையத்திலிருந்தே இ.போ.ச., தனியார்; நெடுந்தூர சேவை – ஓகஸ்ட் முதல் நடைமுறை
எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து இலங்கைப் போக்குவரத்துசபை மற்றும் தனியாரின் நெடுந்தூர சேவைகள் நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்தும், இலங்கைப் போக்குவரத்துசபை மற்றும் தனியாரின் உள்ளூர் சேவைகள் தற்போது இலங்கைப் போக்குவரத்துசபை செயற்படும் மத்தியபேருந்து நிலையத்திலிருந்தும் மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடக்குமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
நெடுந்தூரப் பேருந்து நிலையத்தைச் செயற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன். நெடுந் தூரப் பேருந்து நிலையத்திலிருந்து தனியாரும், இலங்கைப் போக்குவரத்து சபையினரும் இணைந்த நேர அட்டவணையில் செயற்படுவது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் நெடுந்தூர தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தால் மாகாண மேல் நீதிமன்றத்தில், வடக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கும். இலங்கைப் போக்குவரத்துச்சபைக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், பேருந்து சேவைகள் மக்களின் நன்மைக்காகத்தான் செயற்படுத்தப்படுகின்றன. எனவே மக்கள் நலனை முன்னிறுத்தியே தீர்மானங்கள் எடுக்கப்படவேண்டும். நெடுந்தூரப் பேருந்து நிலையத்துக்குச் செல்வதால் மக்களுக்குத்தான் பல்வேறுவகைகளிலும் நன்மை. அதேநேரம், இலங்கைப் போக்குவரத்துச் சபையினர் சில குறைபாடுகளைச் சொல்கின்றனர். எனவே, இந்தத் திட்டத்தை செயற்படுத்தும்போது ஏற்படுகின்ற குறைகளைத் தொடர்ச்சியாக நிவர்த்தி செய்து இதனை நகர்த்துவோம் -என்றார்.