இலங்கை
இலங்கையில் கைதான தமிழக மீனவர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
இலங்கையில் கைதான தமிழக மீனவர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
கடந்த ஜூலை 13 ஆம் திகதியன்று நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 7 தமிழக ராமேஸ்வரம் மீனவர்களை எதிர்வரும் ஒகஸ்ட் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நேற்று (25) உத்தரவிட்டார்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இம்மீனவர்கள், இந்திய இழுவைப் படகுடன் கைது செய்யப்பட்டு, காங்கேசன்துறை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பின்னர், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டு, ஜூலை 13 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அன்று முதல் நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர்கள், நேற்றைய விசாரணையில் மேலும் ஒகஸ்ட் 06 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இந்த ஆண்டில் இதுவரை 25 படகுகளுடன் 185 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.