பொழுதுபோக்கு
கேரக்டராக வாழ்ந்த வடிவேலு; நடிப்பில் மிரட்டிய பஹத் பாசில்: மாரீசன் படம் எப்படி?
கேரக்டராக வாழ்ந்த வடிவேலு; நடிப்பில் மிரட்டிய பஹத் பாசில்: மாரீசன் படம் எப்படி?
தமிழ் சினிமாவில் காமெடியில் உச்சம் தொட்ட வடிவேலு மாமன்னன் படத்திற்கு பிறகு, கதையின் நாயகனாக நடித்துவரும் நிலையில், பஹத் பாசிலுடன் இணைந்து அவர் நடித்துள்ள மாரீசன் திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இந்த பதிவில் பார்ப்போம்.படத்தில் வேலாயுதம் பிள்ளை கேரக்டரில் நடித்துள்ள நடிகர் வடிவேலு ஒரு ஞாபக மறதி நோயாளி. அவரது வீட்டுக்கு திருட வரும தயாளன் (பஹத் பாசில்) வடிவேலுவை சங்கிலியால் கட்டி போட்டிருப்பதை பார்க்கிறார். அப்போது வடிவேலு தன் ஒரு ஞாபக மறதி நோயாளி என்றும், தன்னால் வெளியில் சென்றால் மீண்டும் வீட்டுக்கு வர முடியாது என்பதால் தன்னை கட்டி போட்டிருப்பதாக சொல்கிறார். மேலும் தன்னை இங்கிருந்து விடுவிக்குமாறு பஹத் பாசிலிடம் கூறுகிறார்.மேலும், தன்னை விடுவித்தால் 25 ஆயிரம் பணம் கொடுக்கதாக வடிவேலு சொல்ல, அவரது பேச்சை கேட்டு பஹத் பாசில் அவரை விடுவித்து அழைத்து செல்கிறார். வெளியில் வந்த வடிவேலு, ஏ.டி.எம.மில் பணம் எடுக்க செல்லும்போது பஹத் பாசில் வெளியில் இருந்து பார்க்கிறார். அப்போது வடிவேலு அக்கவுண்டில் ரூ25 லட்சம் பணம் இருப்பது தெரிகிறது. இதை பார்த்தவுடன், இந்த பணத்தை எப்படியாவது கொள்ளையடிக்க வேண்டும் என்று நினைக்கும் பஹத் பாசில், அவருடன் பயணமாக தயராகிறார்.வடிவேலுவிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே அவர் எங்கே செல்ல வேண்டும் என்று கேட்க, அவர் திருவண்ணாமலை போக வேண்டும் என்று சொல்கிறார். அவரை தனது பைக்கிலேயே ட்ராப் செய்வதாக கூறும் பஹத் பாசில் வடிவேலுவை அழைத்துக்கொண்டு கிளம்புகிறார். வழியில் இவர்களுக்கு இடையில் நடக்கும் உரையாடல், பஹத் பாசில் அந்த பணத்தை கொள்ளையடித்தாரா? அல்லது திருந்தினாரா என்ற கேள்விகள் இல்லாமல் இடைவேளைக்கு பிறகு, படம் முழுவதும் வேறு கோணத்திற்கு செல்கிறது. அதன்பிறகு என்ன நடந்தது என்பது தான் இந்த படத்தின் கதை.மாமன்னன் படத்தில் டைட்டில் கேரக்டரில் நடித்து தான் ஒரு காமெடியன் மட்டும் அல்ல என பொட்டில் ஆணி அடித்தது போல் உணர்த்திய வடிவேலு, இந்த படத்தில் ஒருபடி மேலே சென்று, வேலாயுதம் பிள்ளையாக வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். ஒரு இடத்தில் கூட முந்தைய படங்களில் பார்த்த வடிவேலுவை கொண்டு வராமல் கேரக்டருக்கு என்ன தேவையே அதை சிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக 2-ம் பாதியில் அவரின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. இதேபோன்ற பலதரப்பட்ட கேரக்டர்களில் வடிவேலு மீண்டும் பார்க்கலாம்.அதேபோல் நடிப்பு அரக்கன் பஹத் பாசில் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வார்த்தைக்கு ஏற்ப சிறப்பாக நடிப்பை வழங்கியுள்ளார். வடிவேலுவுடன் பயணத்தை தொடங்கும்போது வழியில் அவர் செய்யும் சேட்டைகள், கவனத்தை ஈர்க்கிறது. குறிப்பாக வடிவேலுவை ஏமாற்ற அவர் செய்யும் திட்டங்கள், அதன்பிறகு அவரைப்பற்றி தெரிந்துகொண்டவுடன், பரிதவிப்பது என்று தனக்கே உரிதான நடிப்பை அசலாட்டாக செய்துள்ளார்.வடிவேலு மனைவியாக வரும் சித்தாரா, பஹத் பாசில் அம்மாவாக வரும் ரேணுகா, போலீஸ் அதிகாரியாக வரும் கோவை சரளா, தேனப்பன், வடிவேலு நண்பர் லிவிங்ஸ்டன் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை, படத்தில் கூடுதல் பலமாக அமைந்துள்ளது, ஆரம்பத்தில் ஒரு மறதி நோயாளி அவரிடம் இருந்து கொள்ளையடிக்க துடிக்கும் திருடன் ஆகிய இருவரின் பயணமாக தொடங்கி இறுதியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் படம் முடிகிறது. இயக்குனர் சுதீஷ் சங்கர் படத்தை சிறப்பாக கொடுத்துள்ளார்.