இலங்கை
கதிர்காமத்தில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் வெடித்துள்ள சர்ச்சை
கதிர்காமத்தில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் வெடித்துள்ள சர்ச்சை
வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் ஏழுமலை ஆலயத்தின் பாதுகாப்பிற்காக நிறுவப்பட்ட காவலரணில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அந்த ஆலயத்தின் விகாராதிபதியால் ஜனாதிபதிக்கு அனுப்பியதாக கூறப்படும் கடிதம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தொடர்பில் பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அந்தச் செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
அதன்படி, ஏழுமலை ஆலயத்தின் பாதுகாப்பிற்கு போதுமான எண்ணிக்கையிலான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அந்த ஆலயத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏழுமலை ஆலயத்தின் காவலரணில் இணைக்கப்பட்டிருந்த மேலதிக அதிகாரிகள் நீக்கப்பட்டு, அந்த அதிகாரிகள் கதிர்காமம் பொலிஸ் பிரிவின் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு ஏழுமலை ஆலயத்தின் பொலிஸ் பாதுகாப்பு முழுமையாக அகற்றப்படவில்லை என்றும் பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.