பொழுதுபோக்கு
நீயும் காக்கிசட்டை, நானும் அதேதான்; உனக்கும் எனக்கும் ஒரே குருவா? பிரபல நடிகரை பார்த்து ரஜினி கொடுத்த ரியாக்ஷன்
நீயும் காக்கிசட்டை, நானும் அதேதான்; உனக்கும் எனக்கும் ஒரே குருவா? பிரபல நடிகரை பார்த்து ரஜினி கொடுத்த ரியாக்ஷன்
‘சிவாஜி’ திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த அனுபவத்தை நடிகர் போஸ் வெங்கட் நினைவு கூர்ந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே நடந்த உரையாடலை, ஸ்பார்க் ப்ளஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.சூப்பர்ஸ்டார் என்று கூறினாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ரஜினிகாந்தின் நினைவு தான் வரும். சுமார் 50 ஆண்டுகளாக திரைத்துறையில் கோலோச்சி இருக்கும் ரஜினிகாந்திற்கு எண்ணிலடங்காத ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது நிதர்சனம். கருப்பு வெள்ளை படங்களில் தொடங்கிய ரஜினிகாந்தின் பயணம், 3டி-யை கண்டு இன்றும் வெற்றிகரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ‘கூலி’ திரைப்படத்தை கூறலாம். தமிழ் சினிமாவில் இருந்து முதன்முறையாக ரூ. 1000 கோடி வசூல் என்ற சாதனையை படைக்க போகும் முதல் திரைப்படம் ‘கூலி’-ஆக இருக்கும் என்று விமர்சகர்கள் கணித்துள்ளனர். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் ரஜினிகாந்திற்கான புகழ் சற்றும் குறையவில்லை என்பதை, இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.இப்படி உச்ச நட்சத்திரமாக விளங்கும் ரஜினிகாந்த், தன்னுடன் பணியாற்றும் கலைஞர்களை மரியாதையாகவும், அன்பாகவும் நடத்தும் விதம் குறித்து பலர் கூறி இருக்கின்றனர். அந்த வகையில், சின்னத்திரையில் பயணத்தை தொடங்கி இன்று திரைத்துறையில் குணச்சத்திர நடிகராக வலம் வரும் போஸ் வெங்கட், ரஜினிகாந்துடனான தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதன்படி, “ரஜினிகாந்துடன் முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டதை மறக்க முடியாது. அவருடன் நடித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ரஜினிகாந்திடம் என்னை அறிமுகம் செய்தது விவேக் தான். என்னை பார்த்ததும் ரஜினிகாந்த் எழுந்து நின்று வரவேற்றார். யார் வந்தாலும் இவ்வாறு செய்யும் பழக்கம் ரஜினிகாந்திற்கு இருக்கிறது.அப்போது, கோப்பாளி சாரிடம் தான், நான் நான்கு ஆண்டுகள் நடிப்பு பயிற்சி பெற்றேன் என்று ரஜினிகாந்திடம் கூறினேன். இதைக் கேட்ட ரஜினிகாந்த் ஆச்சரியமடைந்தார். மேலும், தனக்கும் அவர் தான் குரு என்று ரஜினிகாந்த் கூறினார். திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக என்ன செய்தீர்கள் என்று என்னிடம் ரஜினிகாந்த் கேட்டார். நான், ஆட்டோ ஓட்டியதாக கூறினேன். உடனே, தானும் காக்கி சட்டை தான்; இரண்டு பேருக்கும் சரியாக ஒர்க்-அவுட் ஆகி இருக்கிறது என்று ரஜினிகாந்த் தெரிவித்தார். அதன் பின்னர், படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் என்னுடன் நெருக்கமாக பழகினார். நான் படப்பிடிப்பிற்கு வந்ததும் என்னை அழைத்து வரச் சொல்லி உதவியாளர்களிடம் கூறுவார்” என நடிகர் போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார்.