பொழுதுபோக்கு
பிறந்தது மன்னார்குடி… வளர்ந்தது செட்டிநாடு; லெஜன்ட் மனோரமாவுக்கு ‘ஆச்சி’ பெயர் வந்தது இப்படி தான்!
பிறந்தது மன்னார்குடி… வளர்ந்தது செட்டிநாடு; லெஜன்ட் மனோரமாவுக்கு ‘ஆச்சி’ பெயர் வந்தது இப்படி தான்!
தென்னிந்திய சினிமாவில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடிப்பதில் ஜாம்பவானாக வலம் வந்தவர் மனோரமா. ‘ஆச்சி’ மனோரமா என அன்புடன் அழைக்கப்படும் இவர், பல ஆண்டுகளாக திரைத்துறையில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். ஏறத்தாழ, 1,500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மனோரமா. மனோரமாவின் திறமைக்கு எண்ணற்ற விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தனது நடிப்பு மூலம் இந்திய திரையுலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் மனோரமா என்று கூறினால், மிகையாகாது. அந்த அளவிற்கு அவர் ஏற்று நடித்த பாத்திரங்கள் அழுத்தமானவை.முன்னணி நடிகர்கள் அத்தனை பேருடனும் இணைந்து நடித்த பெருமை மனோரமாவிற்கு இருக்கிறது. இன்று வரை பல நடிகைகளுக்கு இன்ஸ்பிரேஷனாக மனோரமா விளங்குகிறார். இவ்வளவு புகழ் பெற்ற மனோரமாவிற்கு ‘ஆச்சி’ என்ற அடைமொழி எவ்வாறு வந்தது என்ற சந்தேகம் இன்றைய தலைமுறையினர் பலருக்கு இருக்கும். அந்த வகையில், இப்பெயருக்கான காரணத்தை நேர்காணல் ஒன்றில் மனோரமா தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.அதன்படி, “தஞ்சை மாவட்டம், ராஜமன்னார்குடி பகுதியில் தான் நான் பிறந்தேன். ஆனால், வளர்ந்தது செட்டிநாடு. அப்பகுதியில் செட்டியார் பெண்களை ‘ஆச்சி’ என்று அழைப்பார்கள். மரியாதை நிமித்தமாக அவ்வாறு அழைப்பார்கள்.நான் செட்டிநாட்டில் இருந்து வந்த காரணத்தால், ஏ.வி.எம் நிறுவனத்தில் என்னை ‘ஆச்சி’ என்று அழைக்கத் தொடங்கினார்கள். அந்த காலத்தில் நடித்த ஜெய்சங்கர், சிவகுமார், லட்சுமி போன்றோர் என்னை அம்மா அல்லது அக்கா என்று கூப்பிட முடியாத காரணத்தால், அவர்களும் ‘ஆச்சி’ என்று அழைத்தனர். இது மட்டுமின்றி ரசிகர்களும் என்னை ‘ஆச்சி’ என்று அன்போடு அழைக்கத் தொடங்கினார்கள். இது எனக்கும் பெருமையாக இருந்தது. திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதியில் ‘ஆச்சி’ என்றால் பாட்டியை குறிப்பிடும். ஆனால், செட்டிநாடு பகுதியில் ‘ஆச்சி’ என்பது மரியாதை நிமித்தமான சொல். அப்படி என்னை அழைப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று மனோரமா தெரிவித்தார். இதன் மூலம் ‘ஆச்சி’ என்ற பெயருக்கான காரணத்தை பலரும் அறிந்து கொண்டனர்.