பொழுதுபோக்கு
மனைவிக்கு ஹார்ட் அட்டாக்; கேட்காமல் லட்ச கணக்கில் உதவிய ரஜினி: லிவிங்ஸ்டன் உருக்கம்!
மனைவிக்கு ஹார்ட் அட்டாக்; கேட்காமல் லட்ச கணக்கில் உதவிய ரஜினி: லிவிங்ஸ்டன் உருக்கம்!
நடிகர் லிவிங்ஸ்டன், தனது மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்ட நேரத்தில் மருத்துவ செலவுக்காக ரூ. 15 லட்சத்தை ரஜினிகாந்த் கொடுத்து உதவியதாக சமீபத்திய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.சினிமாவை பொறுத்தவரை ரஜினிகாந்தின் சாதனைகளை யாராலும் அவ்வளவு எளிதாக முறியடிக்க முடியாது என்று பலரும் கூறுகின்றனர். அந்த அளவிற்கு ஏராளமான ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்த முன்னணி நடிகர் ரஜினிகாந்த் தான் என்று சினிமா விமர்சகர்கள் இடையே ஒரு கருத்து நிலவுகிறது. இதற்கு ஏற்றார் போல், வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் கூலி திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.ஆனால், இவை அனைத்தையும் கடந்து விளம்பரம் இல்லாமல் மற்றவர்களுக்கு உதவி செய்யும் ரஜினிகாந்தின் குணம் குறித்து ஏராளமானோர் பதிவு செய்துள்ளனர். அந்த வரிசையில், நடிகர் லிவிங்ஸ்டனும் தனக்கு, ரஜினிகாந்த் செய்த உதவி குறித்து சமீபத்தில் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, தனது மனைவி தற்போது உயிரோடு இருப்பதற்கு காரணம், ரஜினிகாந்த் செய்த உதவி தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.அதன்படி, “ரஜினிகாந்த் எனக்கு செய்த ஒரு பெரிய உதவியை என் வாழ்வில் மறக்கவே முடியாது. என் மனைவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், என்ன செய்வது என்று அறியாமல் மனம் உடைந்து போனேன். அந்த நேரத்தில் லால் சலாம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். இது குறித்து உதவி இயக்குநர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். இதனை ரஜினிகாந்த் எவ்வாறு அறிந்து கொண்டார் என்று எனக்கு தெரியவில்லை. என்னை நேரில் அழைத்த ரஜினிகாந்த், என்னிடம் ரூ. 15 லட்சத்தை கொடுத்து உதவி செய்தார். இன்று என் மனைவி உயிருடன் இருப்பதற்கு காரணம் ரஜினிகாந்த் தான்.ஒரு சகோதரராக இருந்து எனக்கு இந்த உதவியை ரஜினிகாந்த் செய்தார். எங்கள் வீட்டின் பூஜை அறையில் அவரது புகைப்படம் வைத்துள்ளேன். இப்போது, அவர் தான் எங்களுக்கு கடவுள் போன்றவர்” என நடிகர் லிவிங்ஸ்டன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சிறிய விளம்பரம் கூட இல்லாமல், ரஜினிகாந்த் செய்த இந்த செயல், பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.