இலங்கை
கோத்தாபயவுக்காக ஈஸ்டர் தாக்குதலா…முடுக்கிவிடப்பட்டது விசாரணை; அமைச்சர் பிமல் வெளிப்படை
கோத்தாபயவுக்காக ஈஸ்டர் தாக்குதலா…முடுக்கிவிடப்பட்டது விசாரணை; அமைச்சர் பிமல் வெளிப்படை
கேத்தாபய ராஜபக்சவை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காகத்தான் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் இடம்பெற்றனவா? என்ற கோணத்தில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன – இவ்வாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளர்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
அரசியல்வாதிகள் அதிகாரத்துக்கு வருவதற்காகவும் கைப்பற்றிய அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதற்காகவுமே கடந்த காலங்களில் இனவாதத்தைப் பயன்படுத்தினர். மஹிந்த ராஜபக்சவும் அப்படித்தான். கோத்தாபய ராஜபக்சவும் அப்படித்தான். கோத்தாபய ராஜபக்ச அதிகாரத்துக்கு வருவதற்காகத்தான் ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற சந்தேகம் உண்டு. இப்போது அதற்கான விசாரணை இடம்பெறுகிறது.
அதிகாரத்துக்கு வருவதற்கும் அதிகாரத்தில் நிலைத்து இருப்பதற்கும் இனவாதத்தைப் பயன்படுத்த எவருக்கும் இனியும் இடமில்லை. இந்தத் தகவலை மிகவும் ஆணித்தரமாகக் கூறிக்கொள்கின்றோம்.
ஒரு தலைமுறையை 1983ஆம் ஆண்டில் இழந்தோம். அதன் தொடர்ச்சியாக பல அழிவுகளைச் சந்தித்து 2009ஆம் ஆண்டு இன்னொரு தலைமுறையையும் இழந்தோம். 2022ஆம் ஆண்டுதொடக்கம் 2024ஆம் ஆண்டுவரை ஏராளமான மக்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இதுவும் ஒருவகைக் கொலைதான். கோத்தாபயவால் நிகழ்த்தப்பட்ட பெரும் அநியாயம் இது.
2015ஆம் ஆண்டுவரை ராஜபக்சக்கள் இனவாதத்தை வளர்த்துக் கொண்டு வந்தனர். 2015ஆம் ஆண்டின் பின்னர், இனவாதத்துக்குப் பொருந்தக்கூடிய நிலையை உருவாக்கினார்கள். அதுதான் ஈஸ்டர் தாக்குதலாக வெளிவந்தது. இனவாதம் இழப்பையும், அழிவையும் தவிர வேறு எதையும் தராது – என்றார்.