இலங்கை
தலைமையிலிருந்து சஜித் நீக்கப்படமாட்டார்; ஐ.ம.சக்தி தெரிவிப்பு!
தலைமையிலிருந்து சஜித் நீக்கப்படமாட்டார்; ஐ.ம.சக்தி தெரிவிப்பு!
எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து சஜித் பிரேமதாஸவை நீக்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படும் செய்தி பொய். இது அரசின் கட்டுக்கதை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ எதிர்க்கட்சித் தலைவராக மிகவும் சிறப்பாகச் செயற்பட்டுவருகிறார்.நாட்டு மக்கள் எதிர்நோக்குகின்ற அத்தனை பிரச்சினைகளையும் அவர் நாடாளுமன்றுக்குக் கொண்டு செல்கிறார்.
அவர் நாடாளுமன்றில் அதிகம் பேசுகிறார் என்ற குற்றச்சாட்டும் உண்டு. அப்படி அவர் பேசுவது மக்களின் பிரச்சினைகளைத்தான். இந்த அரசு செய்கின்ற மக்கள் விரோதச் செயல்கள், ஊழல் மோசடிகள் என எல்லாவற்றையும் அவர் நாடாளுமன்றில் அம்பலப்படுத்தி வருகிறார். இது அரசுக்குப் பெரும் தலையிடியாக உள்ளது. இதனாலேயே எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து சஜித்தை நீக்குவதற்காகக் கட்சிக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்ற போலிச் செய்தியைப் பரப்பிவருகிறது அரசு. இதில் எந்த உண்மையும் இல்லை. சஜித் பிரேமதாஸவே தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார் – என்றார்.