இலங்கை
முதலீட்டாளர்களுக்கு வாயிற்கதவுகள் திறப்பு!
முதலீட்டாளர்களுக்கு வாயிற்கதவுகள் திறப்பு!
அச்சமின்றி முன்வருமாறு அமைச்சர் விஜித அழைப்பு!
இலங்கையில் தற்போது முதலீட்டுக்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே அச்சமின்றி எமது நாட்டுக்கு வந்து முதலீடு செய்யுமாறு முதலீட்டாளர்களுக்கு நாம் பகிரங்க அழைப்பு விடுக்கிறோம் என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜிதஹேரத் தெரிவித்துள்ளார் .
இலங்கை வர்த்தக கவுன்ஸிலின் உலகளாவிய சம்மேளனத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் கொழும்பு ஷங்கரில்லா ஹோட்டலில் நடைபெற்ற போது உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:- எமது நாட்டை சர்வதேச நாடுகளுக்கு முன்பாக அழகானதும் வளமானதுமான நாடாகவும் மாற்றவேண்டும். இந்தசவாலை வெற்றிகொள்ள அரசினால் மாத்திரம் முடியாது. இதற்கு வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். நாம் அனைவரும் இணைந்தே நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல வேண்டும். எனவே முதலீட்டாளர்களுக்கு இங்கு வந்து முதலீடுசெய்யுமாறு நாம் அழைப்பு விடுக்கிறோம். தற்போது சுற்றுலா அபிவிருத்தி வலயத்தின் ஊடாக 3 ஆயிரம் ஏக்கர் காணிகள் திறக்கப்பட்டுள்ளன. உலகமெங்கிலும் உள்ள இலங்கையருக்கு இந்தச் செய்தியைக் கூறுங்கள். அச்சமின்றி எமது நாட்டுக்கு வந்து முதலீடு செய்யுமாறு முதலீட்டாளர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம் – என்றார்.