பொழுதுபோக்கு
முன் பதிவில் அசுர வேகம்; 3 நாளில் இத்தனை கோடியா? அமெரிக்காவில் கூலி செய்த தரமான சம்பவம்!
முன் பதிவில் அசுர வேகம்; 3 நாளில் இத்தனை கோடியா? அமெரிக்காவில் கூலி செய்த தரமான சம்பவம்!
தமிழ்த் திரையுலகில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ‘சூப்பர் ஸ்டார்’ எனத் தனது ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர் தற்போது வரை 170 படங்களில் நடித்து மிரட்டி இருக்கிறார். இந்நிலையில், அவர் தற்போது தனது 171-வது படமான ”கூலி” படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது. முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜுடன் ரஜினி கைகோர்த்துள்ள நிலையில், இருவரது கூட்டணியில் உருவாக்கி இருக்கும் கூலி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து இருக்கிறார். அவரது இசையில் வெளியான ‘மோனிகா’ பாடல் பட்டிதொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பி வருகிறது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூலி படத்தில் நடிகர் ரஜினியுடன் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். அமீர் கான் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே நேரத்தில், ரெபா மோனிகா ஜானும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிகிறது. இப்படத்திற்கான புரொமோஷன் ஒருபுறமிருக்க, மறுபுறம் படத்தின் முன்பதிவு அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் முன்பதிவு அனல் பறக்கிறது. ‘கூலி’ படத்திற்கான முன்பதிவு அமெரிக்காவில் மூன்று நாட்களுக்கு முன்பே தொடங்கி நிலையில், இதுவைர ரூ 4.33 கோடி மதிப்புள்ள டிக்கெட்டுகள் விற்று ஏற்கனவே சாதனை படைத்திருப்பதாக தயாரிப்பாளர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் இன்னும் வெளியாகாமல் இருக்கும் சூழலில், இவ்வளவு விரைவாக முன்பதிவு நடைபெற்று வருகிறது ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தையும், படத்திற்கான உலகளாவிய எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்துகிறது. அதேவேளையில், ‘கூலி’ படம் அமெரிக்காவில் முன்பதிவு டிக்கெட் விற்பனையில் 2 மில்லியன் டாலர்களை எட்டும் அதாவது கிட்டத்தட்ட ரூ. 18 கோடி வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையில், ‘கூலி’ படத்திற்கான முன்பதிவு இந்தியாவில் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் மட்டும் உரிமம் ரூ. 81 கோடிக்கு விற்கப்பட்ட இந்தப் படம், உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டிக்கெட் முன்பதிவில் தொடர்ந்து புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.