வணிகம்
2 வருட எஃப்.டி-க்கு 7.4% வட்டி: எந்தெந்த வங்கிகள் அதிக லாபம் தருகின்றன? முழு விவரம்
2 வருட எஃப்.டி-க்கு 7.4% வட்டி: எந்தெந்த வங்கிகள் அதிக லாபம் தருகின்றன? முழு விவரம்
இந்திய ரிசர்வ் வங்கி , இந்த ஆண்டு ரெப்போ விகிதத்தை 5.5% ஆக 100 அடிப்படை புள்ளிகள் குறைத்ததன் மூலம், வங்கிகள் தங்களது ஃபிக்ஸட் டெபாசிட் (FD) வட்டி விகிதங்களை குறைத்துள்ளன. நிலையான வருமானத்தை நம்பி இருக்கும் மூத்த குடிமக்கள் மற்றும் பாதுகாப்பான முதலீட்டாளர்களுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.வங்கிகள் பல்வேறு வட்டி விகிதங்களை வழங்குவதால், சரியான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை தேர்ந்தெடுப்பது உங்கள் வருமானத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இங்கு, 2 வருட காலத்திற்கான அதிகபட்ச ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை வழங்கும் வங்கிகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.இரண்டு வருட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு சி.எஸ்.பி வங்கி 7.4% வட்டி விகிதத்தை வழங்குகிறது. தனியார் வங்கிகளில் இதுவே சிறந்த விகிதமாகும். இதில் ரூ. 1 லட்சம் ஃபிக்ஸட் டெபாசிட், இரண்டு ஆண்டுகளில் ரூ. 1.15 லட்சமாக உயரும்.ஆர்.பி.எல் வங்கி 2 வருட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 7.3% வட்டி விகிதத்தை வழங்குகிறது. ரூ. 1 லட்சம் டெபாசிட், முதிர்வு தேதியில் ரூ. 1.15 லட்சமாக உயரும். பந்தன் வங்கி 2 வருட காலத்திற்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 7.25% வட்டி விகிதத்தை வழங்குகிறது.டி.சி.பி வங்கி 2 வருட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 7.15% வட்டி வழங்குகிறது. இதில் ரூ. 1 லட்சம் டெபாசிட், முதிர்வு தேதியில் ரூ. 1.14 லட்சமாக உயரும். இன்டஸ்இன்ட் வங்கி மற்றும் யெஸ் வங்கி ஆகியவை 2 வருட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 7% வட்டி விகிதத்தை வழங்குகின்றன. ரூ. 1 லட்சம் முதலீடு, முதிர்வு தேதியில் ரூ. 1.14 லட்சமாக அதிகரிக்கும்.இந்தியன் வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி மற்றும் யூகோ வங்கிகள், 2 வருட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 6.9% வட்டி விகிதத்தை வழங்குகின்றன. மேலும், கரூர் வைஸ்யா வங்கி 2 வருட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 6.85% வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஐ.டி.பி.ஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, கர்நாடகா வங்கி மற்றும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஆகியவை 2 வருட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 6.75% வட்டி விகிதத்தை வழங்குகின்றன. இந்திய ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான டெபாசிட் இன்சூரன்ஸ் அண்ட் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷன் (DICGC) ரூ. 5 லட்சம் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.