பொழுதுபோக்கு

ராஜா இந்த டியூன் நல்லாருக்கு, ஆனா பாட்டு சரியில்லை; பிரபல இயக்குனர் சொன்னதால் உடனடியாக வந்த ஹிட் பாட்டு!

Published

on

ராஜா இந்த டியூன் நல்லாருக்கு, ஆனா பாட்டு சரியில்லை; பிரபல இயக்குனர் சொன்னதால் உடனடியாக வந்த ஹிட் பாட்டு!

இசையின் ராஜா, இசைக் கடவுள், இசை அரசன் எனப் பல்வேறு அடைமொழிகளில் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் இளையராஜா. இசைஞானியாக வலம் வரும் இவர் கடந்த 1976 ஆம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு, இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்தார். இளையராஜாவின் பாடல்கள் காலம் கடந்தும், பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறது. சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனையை நிகழ்த்தி இருக்கும் அவர், இசையின் ராஜாவாக திகழ்கிறார். இசைக்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில், அவருக்கு பல்வேறு விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. தற்போது மாநிலங்களவை உறுப்பினராகவும் அவரை நியமனம் செய்து அழகு பார்த்துள்ளது. இளையராஜா – இயக்குநர் மகேந்திரன் கூட்டணி பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளனர். முள்ளும் மலரும், ஜானி, உதிரிப் பூக்கள், காளி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, கை கொட்டும் கை போன்ற படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற படங்கள். அந்த வரிசையில் கடந்த 1981 ஆம் ஆண்டில் இளையராஜா – இயக்குநர் மகேந்திரன் கூட்டணியில் வெளிவந்த படம் தான் நண்டு. இப்படத்தில் வரும் ‘அள்ளி தந்த பூமி அன்னை அல்லவா’ பாடல் சூப்பர் ஹிட் எனலாம். பலரது மனதில் இருந்து நீங்கா பாடலாகவும் இப்பாடல் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்தப் பாடல் உருவான விதம் குறித்து இயக்குநர் யார் கண்ணன் பேசியுள்ளார். இதுபற்றி அவர் டேக் 1 யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், “இளையராஜாவிடம் யாருமே பாடல் சரியில்லை என்று சொல்ல முடியாது, சொல்லவும் மாட்டார்கள். ஆனால் மகேந்திரன் சார் அப்படியல்ல. இளையராஜாவும் அப்படியல்ல. இளையராஜா மகேந்திரன் சார் டீமிடம் ஒரு பாடல் கொடுத்திருக்கிறார் என்றால், அப்பாடலை அவர்கள் எப்படி ஷூட் (படமாக்கி) செய்து இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க ஆசையாக இருப்பார். உடனே பார்க்கவும் வந்துவிடுவார். அப்படித்தான் ஒருமுறை, மகேந்திரன் சார் இளையராஜாவிடம், ‘ராஜா இந்த சாங் (அள்ளி தந்த பூமி அன்னை அல்லவா) டியூனான நல்லா இருந்துச்சு, ஆனா பாடலாக’ என்று இழுத்தவாறு சொன்னார். அப்போது இளையராஜா ‘வேற டியூன் போட்டுருவோம்’ என சொன்னார். பிறகு உடனே இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவில் அடுத்த டியூன் போட்டார். பின்னர், நானும் மகேந்திரன் சாரும் பிரசாத்தில் இருந்து அருணாச்சலம் ரோடு வழியாக ஏ.வி.எம் ஸ்டுடியோ சென்று கொண்டிருந்தோம்.  மகேந்திரன் சார் டியூனை கேட்டுக் கொண்டே வந்தார். ஏ.வி.எம் ஸ்டுடியோ சென்று சேருவதற்குள் மகேந்திரன் சார் என்னிடம், இந்த டியூனுக்கு பாடல் எழுதுங்கள் என்று என்னிடம் சொன்னார். அப்போது என்னிடம் கையில் பேப்பரும் இல்லை. பேனாவும் இல்லை. அந்த நேரத்தில் நான் சொன்ன பல்லவி தான் ‘அள்ளித் தந்த பூமிஅன்னை அல்லவா, சொல்லித்தந்த வானம் தந்தை அல்லவா’. இன்று வரை இந்தப் பாடலுக்கு உலக நாடு முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இலங்கை வானொலியில் இப்பாடல் தினசரி ஒளிபரப்பாகியது.” என்று இயக்குநர் யார் கண்ணன் கூறியுள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version