இந்தியா

மாணவர் இடைநிற்றல், சர்க்கரை நோய்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு மத்திய கல்வித்துறை கடிதம்

Published

on

மாணவர் இடைநிற்றல், சர்க்கரை நோய்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு மத்திய கல்வித்துறை கடிதம்

புதுச்சேரி பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் டைப்-2 சர்க்கரை நோய்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்துவது குறித்து, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கவலை தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். இந்த 2 முக்கிய பிரச்னைகளிலும் புதுச்சேரி அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.மத்திய அமைச்சர் தனது கடிதத்தில், 2023-24ம் கல்வியாண்டில் புதுச்சேரியில் சுமார் 10,000 மாணவ-மாணவிகள் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தேசிய கல்விக்கொள்கையின்படி, 2030-ம் ஆண்டிற்குள் இடைநிற்றல் இல்லாத மாநிலமாக புதுச்சேரி மாற வேண்டும் என்றும், 100% மாணவர் சேர்க்கையை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பள்ளிக்கு செல்லாத மாணவ-மாணவிகளை மீண்டும் கல்வி நிறுவனங்களுக்கு அழைத்து வர தீவிரமான முன்னெடுப்பு பிரசாரத்திற்கு முதலமைச்சரின் தலையீட்டை அவர் கோரினார்.இடைநிற்றல் மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் கல்வி பயில ஊக்குவிக்க புதுச்சேரி அரசு எடுத்து வரும் தொடர்ச்சியான முயற்சிகளைப் பாராட்டிய மத்திய அமைச்சர், தற்போது பதிவாகியுள்ள 10,054 மாணவர்களின் இடைநிற்றல் எண்ணிக்கை குறைப்பதற்கான உடனடி நடவடிக்கைகளின் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.இடைநிற்றல் பிரச்னை மட்டுமின்றி, பள்ளி மாணவர்களிடையே டைப்-2 சர்க்கரை நோய்கள் அதிகரித்து வருவது தனக்கு மிகுந்த கவலை அளிப்பதாகவும் மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதான் தெரிவித்துள்ளார். அதிக சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை மாணவர்கள் அதிகமாக உட்கொள்வதே இதற்கு முக்கியக் காரணம் என்றும், இதனால் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் குறைந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மத்திய அமைச்சரின் பரிந்துரைகள்:பதப்படுத்தப்பட்ட உணவு மீதான மாணவர்களின் தொடர்பைக் குறைப்பதற்கும், ஒட்டுமொத்தமாக ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தழுவுவதற்கும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட சர்க்கரை அளவு, ஆரோக்கியமற்ற உணவுகளில் உள்ள சர்க்கரை அளவு, துரித உணவுகள் (ஜங்க் ஃபுட்) மற்றும் குளிர்பானங்கள் மூலம் அதிகப்படியான சர்க்கரை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் குறித்து மாணவர்களுக்கு விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் விரிவுபடுத்த வேண்டும். மாணவர்களின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தில் முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பு கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே மத்திய அமைச்சரின் கடிதத்தின் சாரம்சம் ஆகும்.செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version