பொழுதுபோக்கு
நெகடீவ் கலந்த நல்ல கேரக்டர்; கதை சொன்னப்போவே தெரியும்: ‘பார்கிங்’ பற்றி எம்.எஸ்.பாஸ்கர் த்ரேபேக்!
நெகடீவ் கலந்த நல்ல கேரக்டர்; கதை சொன்னப்போவே தெரியும்: ‘பார்கிங்’ பற்றி எம்.எஸ்.பாஸ்கர் த்ரேபேக்!
தமிழ் சினிமாவில், எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் அசத்தலாக நடிப்பை கொடுக்கக்கூடிய முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் எம்.எஸ்.பாஸ்கர். இவர் நடித்த பார்க்கிங் திரைப்படம் 3 பிரிவுகளில் தேசிய விருதை வென்றுள்ள நிலையில், இந்த படம் குறித்து எம்.எஸ்.பாஸ்கர் பேசிய ஒரு வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படம் பார்க்கிங். ஹரிஷ் கல்யாண், இந்துஜா ரவிச்சந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம், ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல், படத்தின் இயக்குனரான ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கும் பாராட்டுக்கள் குவிந்தத. இந்த படம் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் இருக்கும் ஒருவர், அவர் வீ்ட்டுக்கு மேலே குடி வரும் ஒரு இளைஞருடன் பார்க்கிங் இடத்திற்காக நடந்த சண்டை எந்த அளவுக்கு சீரியஸாக மாறுகிறது என்பதை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டது தான் இந்த படம். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணம் எம்.எஸ்.பாஸ்கர் இருவரும் போட்டி போட்டு நடித்திருந்தனர். குறிப்பாக எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது.தற்போது 71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் ஆகிய 3 பிரிவில், பார்கிங் படத்திற்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது, இதனிடையே இந்த படம் குறித்து எம்.எஸ்.பாஸ்கர் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், இந்த கதையின் படப்பிடிப்பு தொங்கும் முன்பே எனக்கு தெரியும். இயக்குனர் இந்த படத்தின் கேரக்டர் குறித்து என்னிடம் முன்பே சொல்லிவிட்டார். இது எல்லா இடத்திலும் இருக்கும் பிரச்னை தான்.படத்தின் கதையை அவர் சொன்ன விதமும் சிறப்பாக இருந்தது. அதன்பிறகு தயாரிப்பாளர்கள் வந்து பேசினார்கள். இளம்பரிதி என்ற அந்த கேரக்டர் ரொம்ப நல்லா இருந்தது. இந்த மாதிரி நெகடீவ் கலந்த கேரக்டர் பண்ணணும். குணச்சித்திர கேரக்டர் பண்ணிட்டு இருக்கேன். இதுவும் ஒரு நெகடீவ் கலந்த நல்ல கேரக்டர் தானே அதனால் நிச்சயமாக பண்ணுகிறேன் என்று ஒப்புக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.இதனிடையே தற்போது தேசிய விருது கிடைத்துள்ளது குறித்து சன் நியூஸ் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த பெருமை எனது அன்புமகன் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கும், அதன் தயாரிப்பாளர் தினேஷ் அவருக்கும்தான் போய் சேர வேண்டும். எனக்கு ஒரு நல்ல கேரக்டர் கொடுத்த படம் தான் இந்த பார்க்கிங். இந்த படத்திற்கு தேசிய விருது கொடுத்த தேர்வு கமிட்டிக்கு எனது மனமார்ந்த நன்றி. படத்தை வெற்றிப்படமாக்கிய தமிழக மக்களுக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.