பொழுதுபோக்கு
நெகடீவ் கேரக்டர், தயவு செய்து பண்ணுங்க அப்பா: கெஞ்சிய மகளுக்காக நடித்த இயக்குனர்: தெறி பட வில்லன் இவர் தான்!
நெகடீவ் கேரக்டர், தயவு செய்து பண்ணுங்க அப்பா: கெஞ்சிய மகளுக்காக நடித்த இயக்குனர்: தெறி பட வில்லன் இவர் தான்!
தமிழ் சினிமாவில் சில படங்களே இயக்கியிருந்தாலும் அந்த படங்களை காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளாக மாற்றி வெற்றி கண்டவர் தான் மகேந்திரன். இவரை நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயற்சி செய்திருந்தாலும் இறுதியில் அட்லிதான் அவரை நடிகராக அறிமுகப்படுத்தினார். இந்த வாய்ப்பு எப்படி அமைந்தது என்பது குறித்து அவரது மகள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.1966-ம் ஆண்டு ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான நாம் மூவர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில், கதாசிரியராக அறிமுகமானவர் தான் மகேந்திரன். தொடர்ந்து, சபாஷ் தம்பி, கங்கா, நிறைகுடம், உள்ளிட்ட படங்களுக்கு கதை எழுதிய இவர், சிவாஜி கணேசனின் ஐகானிக் படமாக கருதப்படும் தங்கப்பதக்கம் படத்திற்கும் கதை எழுதியது மகேந்திரன் தான். அதன்பிறகும் பல படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதிய அவர், 1978-ம் ஆண்டு வெளியான முள்ளும், மலரும் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.ரஜினிகாந்த், ஷோபா, சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் ரஜினிகாந்துக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. அதுவரை ஆக்ஷன் படங்களில் நடித்து வந்த ரஜினிகாந்த் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான அண்ணன் கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார். இந்த படத்தை தொடர்ந்து உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுகள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே, நண்டு, மெட்டி, ஊர் பஞ்சாயத்து உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருந்தார். கடைசியாக 2006-ம் ஆண்டு வெளியாக சாசனம் படத்தை இயக்கினார்.2004-ம் ஆண்டு வெளியான காமராஜர் என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த மகேந்திரன், 12 வருடங்கள் கழித்து 2016-ம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய தெறி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு முன்னதாக, அவருக்கு பல வாய்ப்புகள் வந்திருந்தாலும், அந்த வாய்ப்புகளை ஏற்க மகேந்திரன் மறுத்துள்ளார். அதேபோல் அவர் இயக்கிய படங்கள் அனைத்தும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள். அதே சமயம், கமர்ஷியல் படங்களை இயக்குவதற்காக வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார்.குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஆயுத எழுத்து படத்தில், பாரதிராஜா கேரக்டரில் நடிக்க முதலில் தேர்வு செய்யப்பட்டவர் மகேந்திரன். ஆனால் அவர் ஒப்புக்கொள்ளததால், பாரதிராஜாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. பல வாய்ப்புகளை மறுத்த மகேந்திரனை நடிக்க வைக்க, தெறி படத்தின் இயக்குனர் அட்லி, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு முயற்சி செய்துள்ளனர். இந்த படத்தில் நெகடீவ் கேரக்டர் என்று தெரிந்தவுடன், அப்பா தயவு செய்து நடியுங்கள், நெகடீவ் கேரக்டர் என்று அவரது மகள் அனுரீதா கூறியுள்ளார்.மகளின் வேண்டுகோளை ஏற்று அந்த படத்தில் நடிக்க தொடங்கிய மகேந்திரன், அதன்பிறகு 9 படங்களில் நடித்திருந்தார். குறிப்பாக ரஜினிகாந்தின் பேட்ட, சிவராஜ்குமாரின் ருஷ்டம் என்ற கன்னட படம் ஆகியவற்றில் நடித்திருந்தார். இந்த தகவலை அவரது மகள் அனுரீதா கூறியுள்ளார். பலர் நடிக்க கேட்டு ஒப்புக்கொள்ளாத மகேந்திரன் மகளின் வேண்டுகோளுக்காக வில்லனாக நடிக்க தொடங்கி முத்திரை பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,