பொழுதுபோக்கு

40 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்: ‘கூலி’ வசூல் பாதிக்குமா?

Published

on

40 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்: ‘கூலி’ வசூல் பாதிக்குமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாரான கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். வேட்டையன் படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்து வெளியாகும் இந்தப் படத்திற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கிடையே, இந்த படத்திற்கு மத்திய சென்சார் வாரியம் ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது. படத்தில் அதீத வன்முறை காட்சிகள் காரணமாக இப்படி ‘அடல்ஸ் ஒன்லி’ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஏ சான்றிதழ் பெற்றிருக்கும் முதல் படம் கூலி என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெடிய சினிமா பயணத்தில் ஏ சான்றிதழ் பெற்றிருக்கும் அவரது இரண்டாவது படம் இது ஆகும். ஏற்கனவே 1985 ஆம் ஆண்டு வெளியான நான் சிகப்பு மனிதன் படம் ஏ சான்றிதழ் பெற்றிருந்தது. அந்தப் படத்தில் வன்முறை காட்சிகளுக்காகவும், ரஜினியின் தங்கை கேரக்டரை வில்லன் ரேப் செய்யும் காட்சிக்காகவும் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. நான் சிகப்பு மனிதன் வெளியாகி 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்த் படம் ஏ சான்றிதழில் சிக்கி இருக்கிறது. வயது வந்தவர்களுக்கு மட்டும் என சான்றிதழ் பெறப்பட்டிருப்பதால் இந்த படத்தை குழந்தைகள் பார்க்க முடியாது. எனவே குடும்பத்துடன் வந்து பார்க்கும் ஆடியன்ஸ் எண்ணிக்கை குறையுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இது குறித்து சினிமா புள்ளிவிவர ஆய்வாளரும், விமர்சகருமான திராவிட ஜீவாவிடம் கேட்டோம். அவர் கூறுகையில், ‘ஏ சான்றிதழால் ரஜினிகாந்த் பட வசூல் எந்த வகையிலும் பாதிக்கப்படாது. நான் சிகப்பு மனிதன் உடனே அதற்கு ஒரு உதாரணம். அந்தப் படம் அந்த காலத்திலேயே 46 தியேட்டர்களில் 50 நாட்களை கடந்து ஓடிய வெற்றிப் படம் தான். அதேபோல இப்போது கூலி படமும் ரிலீஸ் ஆகும் முன்பே வியாபாரத்தில் உத்தேசமாக 500 கோடி ரூபாயை தாண்டி விட்டது. அஜித், விஜய் படங்கள் இணைந்து பெறுகிற வியாபாரத் தொகையை விட இது அதிகம். இன்னும் சொல்லப்போனால் கபாலி படத்தின் பிசினஸை இப்போது கூலி படம் தான் முறியடித்து இருக்கிறது. கூலி படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பில் சென்சார் சான்றிதழை எல்லாம் மக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. படம் பிரம்மாண்ட வெற்றியாக தான் இருக்கும்’ என்றார் திராவிட ஜீவா.ஆகஸ்ட் இரண்டாம் தேதி பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே கூலி படத்தின் ஆடியோ லான்ச், ட்ரைலர் ரிலீஸ் ஆகியனவும் களை கட்டியிருக்கிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version