பொழுதுபோக்கு
மார்க்கெட் அவுட்யா… வேற ஹீரோ பாரு; கேப்டனை நம்பாத தயாரிப்பாளர்; எஸ்.ஏ.சி சிக்சர் அடித்த படம்!
மார்க்கெட் அவுட்யா… வேற ஹீரோ பாரு; கேப்டனை நம்பாத தயாரிப்பாளர்; எஸ்.ஏ.சி சிக்சர் அடித்த படம்!
திரைத்துறையில் இன்று சாதித்துள்ள கதாநாயகர்களில் 90% கதாநாயகர்கள் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே சாதித்துள்ளனர். அதில் விஜயகாந்த்தும் ஒருவர். ‘இனிக்கும் இளமை’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான விஜயகாந்த், அதன் பிறகு சில படங்களில் நடித்தார். அந்தப் படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. பெரிய அளவிலான வெற்றியைப் பெறமுடியாமல் தவித்துவந்த விஜயகாந்துக்கு ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 100 நாட்கள் ஓடிய அந்த திரைப்படம் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் திருப்புமுனையாக அமைந்தது.அதன் பிறகு, எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் பி.எஸ்.வீரப்பா தயாரிப்பில் ‘நெஞ்சிலே துணிவிருந்தால்’ படத்தில் நடித்தார். அந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாவிட்டாலும் தோல்விப்படமாக அமையவில்லை. தொடர்ந்து விஜயகாந்த் நடித்த ‘நீதி பிழைத்தது’, ‘சாதிக்கொரு நீதி’, ‘சட்டம் சிரிக்கிறது’, ‘ஆட்டோ ராஜா’, ‘பட்டணத்து ராஜாக்கள்’ என வரிசையாக 5 படங்கள் தோல்வியைத் தழுவின. 5 தோல்வி படங்கள் கொடுத்தால் நடிகனின் திரை வாழ்க்கை என்னவாகும்? எத்தனை காலத்திற்குத்தான் ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தின் வெற்றியைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கமுடியும்? மார்க்கெட் சரிந்து படவாய்ப்புகள் இல்லாத நிலைக்கு விஜயகாந்த் சென்றுவிட்டார். விஜயகாந்த் எப்படிச் சரிவைச் சந்தித்தாரோ, அதுபோன்ற சரிவை எஸ்.ஏ.சந்திரசேகரும் சந்தித்தார். ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்திற்குப் பிறகு அவர் இயக்கிய எந்த படங்களும் வெற்றிபெறவில்லை.இந்தச் சூழ்நிலையில், பி.எஸ்.வீராப்பா தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் எஸ்.ஏ.சந்திரசேகரை வைத்துப் படமெடுக்க முடிவெடுத்தார். படத்தில் யாரை கதாநாயகனாக நடிக்க வைப்பது என எஸ்.ஏ.சந்திரசேகர் யோசித்துக் கொண்டிருந்தார். தொடர் தோல்விப் படங்கள் கொடுத்த இயக்குநர் என்பதால், அப்போதைய முன்னணி நடிகர் ஒருவர் அவர் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். பின்னர், காதல் படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஒரு இளம் கதாநாயகனை அணுகியபோதும், அவரும் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை.வேறு வழியின்றி, இருவரது கால்ஷீட்டுமே கிடைக்காததால், எஸ்.ஏ.சந்திரசேகர் மீண்டும் விஜயகாந்த்திடமே சென்றார். ஆனால் தயாரிப்பாளர் பி.எஸ்.வீராப்பாவுக்கு இதில் தயக்கம் இருந்தது. “மார்க்கெட்டே அவுட்டாயிடுச்சு, அவருடன் பண்ணலாமா?” என்று வினவினார். அப்போதுதான் எஸ்.ஏ.சந்திரசேகர் துணிச்சலான முடிவை எடுத்தார். “விஜயகாந்தை வைத்து நான் படம் செய்து தருகிறேன். பொருளாதார ரீதியாக மிகவும் குறைவான பட்ஜெட்டில் செய்து தருகிறேன். எனக்கு வெறும் ரூ.10,000 கொடுங்கள். விஜயகாந்திற்கு ரூ.10,000 கொடுங்கள். படம் முடிந்து வியாபாரமான பிறகு சம்பளம் வாங்கிக் கொள்கிறோம்” என்று தயாரிப்பாளரிடம் உறுதியளித்தார். பட வாய்ப்புகள் ஏதுமில்லாத விஜயகாந்த் உடனடியாக சம்மதித்தார். அப்படித் தொடங்கப்பட்ட படம்தான் ‘சாட்சி’. இதனை அந்தப் படத்தின் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நேர்க்காணல் ஒன்றில் நினைவுகூர்ந்தார்.’சாட்சி’ திரைப்படம் வெளியானபோது, நூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. அந்தப் படத்தின் வெற்றி, விஜயகாந்த்தை மீண்டும் ஒரு பிஸியான கதாநாயகனாக மாற்றியது. இந்த வெற்றிக்குப் பிறகு, பி.எஸ்.வீராப்பா – எஸ்.ஏ.சந்திரசேகர் – விஜயகாந்த் கூட்டணி ‘வெற்றி’ என்ற படத்திற்காக மீண்டும் இணைந்தது. அந்தப் படமும் நூறு நாட்களைக் கடந்து ஓடியது. ‘சாட்சி’ மற்றும் ‘வெற்றி’ படங்களின் தொடர் வெற்றியைத் தொடர்ந்து, மற்ற தயாரிப்பு நிறுவனங்களும், இயக்குநர்களும் விஜயகாந்த்தை தங்கள் படங்களில் நடிக்க வைக்கப் போட்டிபோட்டனர். ‘சாட்சி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, அடுத்த இருபது ஆண்டுகளுக்கு, தமிழகத்தின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக விஜயகாந்த் திகழ்ந்தார். அந்தக் காலகட்டத்தில், ரஜினிகாந்த்திற்கு அடுத்தபடியாக முக்கிய நடிகராக விஜயகாந்த் கருதப்பட்டார்.