இலங்கை
ஏற்றுமதி, இறக்குமதிகளை சமப்படுத்த விரும்பும் அமெ.; இலங்கை விடயத்தில் இன்னமும் திருப்தியில்லை
ஏற்றுமதி, இறக்குமதிகளை சமப்படுத்த விரும்பும் அமெ.; இலங்கை விடயத்தில் இன்னமும் திருப்தியில்லை
இலங்கைக்கு விதிக்கப்பட்ட பரஸ்பர இறக்குமதி தீர்வைவரியை அமெரிக்கா 20வீதமாகக் குறைத்துள்ள போதும், இலங்கை விடயத்தில் அமெரிக்கா இன்னமும் திருப்தி கொள்ளவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
பங்களாதேஷ், கம்போ டியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான், வியட்நாம் ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா செய்து கொண்ட ஒப்பந்தங்களைப் போன்று இலங்கைக்கான அமெரிக்க ஏற்றுமதிகள் மீதான அனைத்து வரிகளையும் நீக்கவேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது என்று கூறப்படுகின்றது.
அதேவேளை, அமெரிக்கா இலங்கைக்கான பரஸ்பர இறக்குமதி தீர்வை வரியை 20 வீதமாகக் குறைத்தமைக்கு ஈடாக, இலங்கை அமெரிக்காவுக்கு பரந்துபட்ட அளவிலான சலுகைகளை வழங்கியுள்ளது என்று தெரியவருகின்றது. இந்தச் சலுகைகள் அமெரிக்கத் தொழில்துறை மற்றும் விவசாயப் பொருள்களுக்குப் பொருந்தும் என்றும் கூறப்படுகின்றது. இந்தச்சலுகைகளின் அடிப்படையில் அமெரிக்கப் பொருள்களில் அதிகமானவை கட்டணங்கள் இன்றி இலங்கைக்குள் எடுத்துவரப்பட வாய்ப்புள்ளது. அதேநேரம் இலங்கை 50 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள மசகு எண்ணெய் மற்றும் 300 மில்லியன் டொலர் அமெரிக்க மதிப்புள்ள எரிவாயு என்பவற்றையும் அமெரிக்காவில் இருந்து கொள்வனவு செய்ய உறுதியளித்துள்ளது.
இலங்கை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்வதைவிடவும், அமெரிக்காவுக்குக் கணிசமான அளவில் ஏற்றுமதி செய்கின்றது. இந்த இடைவெளியைக் குறைக்க ஜனாதிபதி ட்ரம்ப் விரும்புகின்றார் என்று அமெரிக்கத் தரப்புகள் இலங்கைக்குத் தொடர்ச்சியாகக் சுட்டிக்காட்டிவருகின்றன என்று சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.