இலங்கை
குழந்தை வரம் தரும் அற்புத விரதமான ஏகாதசி விரதத்தின் வழிபாட்டு முறை
குழந்தை வரம் தரும் அற்புத விரதமான ஏகாதசி விரதத்தின் வழிபாட்டு முறை
ஆடி மாதத்தின் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு புத்ரதா ஏகாதசி என்றும், ஸ்ரவன மாதத்தில் வரும் ஏகாதசி என்பதால் ஸ்ரவன புத்ரதா ஏகாதசி என்றும் பெயர். குழந்தை வரம் தரும் ஏகாதசி என்பதால் புத்ரதா ஏகாதசி என சொல்லப்படுகிறது.
புத்ரதா ஏகாதசி விரதம் , குழந்தை வரம் தருவது மட்டுமல்ல, பாவங்கள் அனைத்தையும் போக்கி, ஆன்மிகத்தில் உயர்ந்த நிலையை அடைவதற்கும் வழியை அருளும் விரதம் ஆகும்.
பக்தி சிரத்தையுடன் இந்த விரதத்தை கடைபிடித்தால் மகிழ்ச்சி, அமைதி, செல்வ வளம் ஆகியவை கிடைக்கும்.
விரதம் இருப்பவர்கள் மட்டுமின்றி அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வாழ்க்கையில் சரியான பாதையை காட்டி, தெய்வீக அருளையும், மோட்சம் அடைவதற்கான வழியையும் காட்டும் உன்னதமான விரதம் ஆகும்.
இந்த ஆண்டு புத்ரதா ஏகாதசி விரதம் ஆகஸ்ட் 05ம் திகதி கடைபிடிக்கப்பட உள்ளது. ஆகஸ்ட் 04ம் திகதி காலை 11.34 மணிக்கு துவங்கி, ஆகஸ்ட் 05ம் திகதி பகல் 01.03 மணி வரை ஏகாதசி திதி உள்ளது.
ஏகாதசி விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, விரதத்தை துவக்க வேண்டும். உபவாசமாக இருக்க முடிந்தவர்கள் விரதம் இருக்கலாம்.
அப்படி இருக்க முடியாதவர்கள் தானியங்கள், அரிசி, வெங்காயம், அசைவம் ஆகியவை சேர்க்காமல் எளிமையான உணவுகளை சாப்பிட்டு விரதம் இருக்கலாம். பொதுவாக ஏகாதசி திதியை தசமி திதியில் துவங்கி, துவாதசியில் நிறைவு செய்ய வேண்டும் என்பார்கள்.
அதனால் ஆகஸ்ட் 04ம் திகதியன்று பகல் பொழுதே விரதத்தை துவக்கி, ஆகஸ்ட் 06ம் திகதி காலை 05.45 முதல் 08.26 வரையிலான நேரத்தில் பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம்.
ஏகாதசி அன்று பெருமாளின் சிலைக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தோ அல்லது பெருமாளின் படத்திற்கு பஞ்சாமிர்தம் படைத்தோ வழிபட வேண்டும்.
மஞ்சள் நிற மலர்கள், பழங்கள் ஆகியவை படைத்து பெருமாளை வழிபட வேண்டும். பெருமாளின் திருநாமங்களையும், விஷ்ணு சகஸ்ரநாமத்தையும் பாராயணம் செய்து வழிபட வேண்டும்.
மாலையில் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்க சென்று வழிபடுவது சிறப்பு. இது கோகுலாஷ்டமிக்கு முன்பு வரக் கூடிய ஏகாதசி விரதம் என்பதால் ராதா, கிருஷ்ணரையும் இந்த நாளில் வழிபடுவது சிறப்பு.