தொழில்நுட்பம்
தங்கம் ஏன் எப்போதும் ஜொலிக்கிறது? … துருப்பிடிக்காமல் மங்காத ரகசியம் என்ன?
தங்கம் ஏன் எப்போதும் ஜொலிக்கிறது? … துருப்பிடிக்காமல் மங்காத ரகசியம் என்ன?
தங்கம்… கண்ணைப் பறிக்கும் அழகு, காலத்தால் அழியாத மதிப்பு. நகையாக, முதலீடாக, ஏன் மருத்துவத் துறையிலும்கூட இதன் பயன்பாடுகள் ஏராளம். ஆனால், மற்ற உலோகங்கள்போல தங்கம் ஏன் எளிதில் துருப்பிடிப்பதில்லை என என்றாவது யோசித்தது உண்டா? இந்த வியப்பூட்டும் கேள்விக்கான விடை, தங்கத்தின் தனித்துவமான வேதியியல் பண்புகளில் ஒளிந்துள்ளது.தங்கத்தை வேதியியலாளர்கள் Noble Metal என்றழைக்கின்றனர். இந்த சிறப்பு பேர் சாதாரணமாக கிடைப்பதில்லை. உலோகம் “உன்னதமானது” எனப்படுவதற்கு அதன் முக்கியக் காரணம், அது மற்ற தனிமங்களுடன் மிக எளிதில் வினைபுரிவதில்லை. பெரும்பாலான உலோகங்கள், ஆக்சிஜன், நீருடன் வினைபுரிந்து துருப்பிடிக்கும் (உதாரணமாக இரும்பு துருப்பிடிப்பது) அல்லது காற்றில் உள்ள சல்பர் போன்ற பொருட்களுடன் வினைபுரிந்து நிறம் மங்கும் (வெள்ளி கருப்பாவது) ஆனால், தங்கம் அப்படியல்ல. ஆக்சிஜன், நீர் அல்லது பெரும்பாலான அமிலங்கள் மற்றும் காரங்களுடன் இதுசிறிதும் வினைபுரிவதில்லை. தங்கம் காற்றிலோ, நீரிலோ, சாதாரண வேதிப்பொருட்களிலோ அதன் அசல் நிலையை இழந்து துருப்பிடிப்பதோ அல்லது நிறம் மங்குவதோ இல்லை.தங்கத்தின் இந்த நம்பமுடியாத வேதியியல் உறுதித்தன்மை (Chemical Stability), அதன் அணு அமைப்புடன் தொடர்புடையது. தங்கத்தின் எலக்ட்ரான்கள், அதன் அணுக்கருவால் மிகவும் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. இதனால், மற்ற தனிமங்களிலிருந்து எலக்ட்ரான்களை ஏற்றுக்கொள்வதோ அல்லது எலக்ட்ரான்களை இழப்பதோ தங்கத்திற்கு மிக கடினம். ஒரு தனிமம் வேதியியல் ரீதியாக வினைபுரிய வேண்டுமென்றால், அது எலக்ட்ரான்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும். தங்கம் இதற்குத் தயங்குவதால், அது கிட்டத்தட்ட ஒரு பாதுகாப்புக் கவசம் அணிந்திருப்பது போல, வெளிப்புறத் தாக்குதல்களில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறது.இந்த உள்ளார்ந்த உறுதித்தன்மைதான், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தங்கம் தனது பிரகாசமான, பளபளப்பான தோற்றத்தை தக்கவைத்து கொள்ளக் காரணம். எகிப்திய பிரமிடுகளில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால தங்க ஆபரணங்கள் இன்றும் புத்தம் புதியது போல் ஜொலிப்பதைக் காணும்போது, தங்கத்தின் இந்த அழியாப் பண்பு ஆச்சரியமூட்டுகிறது.மின்சாதனங்கள்: செல்போன்கள், கணினிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களில், நம்பகமான மற்றும் நீண்ட காலம் நீடிக்கும் மின் இணைப்புகளுக்குத் தங்கம் பயன்படுத்தப்படுகிறது. தங்கம் துருப்பிடிக்காததால், காலப்போக்கில் இணைப்புகள் பலவீனமடையாமல், சீராகச் செயல்பட உதவுகிறது.விண்வெளிக் கருவிகள்: விண்வெளியின் கடுமையான சூழலில், அதிக வெப்பநிலை வேறுபாடுகளையும், கதிர்வீச்சையும் தாங்க வேண்டும். அங்குள்ள கருவிகளில் பயன்படுத்தப்படும் மின் இணைப்புகள் மற்றும் சில பாகங்கள் தங்கம் பூசப்பட்டோ அல்லது தங்கத்தால் செய்யப்பட்டோ இருக்கின்றன. இதன் மூலம் அவை நீண்ட காலம் செயல்படும் உறுதி செய்யப்படுகிறது.மருத்துவ உபகரணங்கள்: சில மருத்துவக் கருவிகள் மற்றும் உள்வைப்புகளில் தங்கம் பயன்படுத்தப்படுகிறது. மனித உடலில் தங்கம் எந்த விதமான ஒவ்வாமை அல்லது எதிர்வினையையும் ஏற்படுத்தாததால், இது பாதுகாப்பானது. தங்கம், அதன் அழகுக்கும் மதிப்புக்கும் அப்பால், இந்த புவியிலும், பிரபஞ்சத்திலும் வேதியியல் அதிசயப் பொருள் என்பதை அதன் துருப்பிடிக்காத பண்பு நமக்கு உணர்த்துகிறது.